போலீஸார் 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த விவகாரம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
வியாபாரிகளான தந்தை-மகன் இருவரும் சாத்தான்குளம் போலீஸாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கொடூரமாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் இறந்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோன்று, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், விசாரணை நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் ரகு கணேஷ் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவில், "இந்த வழக்கைப் பொருத்தமட்டில் நான், போலீஸ் காவலில் இருந்த சம்பந்தப்பட்ட நபர்களை தாக்குவதற்கு தனக்கு கீழ் பணியாற்றிய போலீஸாரைத் தூண்டியதாகவும், அதன் விளைவாக அவர்கள் இருவரும் இறந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தால் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. இந்த விவகாரம் ஊடகங்கள் மூலமாக பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட இருவரையும் தாக்கவில்லை.
அவரது விசாரணையின்போது இந்தச் சம்பவம் நடந்து இருப்பது என்பதுதான் அவர் மீதான ஒரே குற்றச்சாட்டாகும். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதிய ஆதாரங்களும் இல்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் ஸ்ரீதர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் எஸ்.நாகமுத்து, வழக்குரைஞர் எம்.பி. பார்த்திபன் ஆகியோரும், ரகு கணேஷ் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அஞ்சனா பிரகாஷ், சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, பாதிக்கப்பட்டவர் தரப்பில் இந்திரா ஜெய்சிங் ஆகியோரும் ஆஜராகினர்.
மனு மீதான விசாரணையின்போது மூத்த வழக்குரைஞர் எஸ். நாகமுத்து வாதிடுகையில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட இருவரையும் மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லும்போது இருவருக்கும் காயம் இருந்ததாக மருத்துவர் குறிப்பிடவில்லை. மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு சென்றபோதும் காயம் இருந்ததாகக் கூறப்படவில்லை.
சிறைக்கு அனுப்பிய பிறகுதான் 3 நாள்கள் கழித்து இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மனுதாரர் ஸ்ரீதர் தாக்கியதாக எந்த ஆதாராமும் அளிக்கப்படவில்லை' என்றார்.
பாதிக்கப்பட்டவர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் இருந்த இரு போலீஸார், மனுதாரர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதை இன்னும் சாட்சியாக விசாரிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் மனுதாரர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ் ஆகிய இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை மிரட்டும் நிலை உருவாகும். அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். இதனால், இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்படக் கூடாது' என்றார்.
இதைத் தொடர்ந்து, "இது மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு. இதனால், தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தரவைப் பிறப்பிக்க விரும்பவில்லை. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது' எனக் கூறிய நீதிமன்றம், மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.