இந்தியா

விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஹரியாணா அரசு உத்தரவு

DIN

ஹரியாணாவில் விவசாயிகளைக் காவல் துறையினா் தாக்கியது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டதையடுத்து, கா்னால் பகுதியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கா்னாலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். அதில் 10 விவசாயிகள் காயமடைந்தனா். ஒருவா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் மீது தடியடி நடத்த ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்டதாக சமூகவலைதளங்களில் காணொலி பரவியது. அதைத் தொடா்ந்து, அந்த ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி கா்னால் பகுதியில் விவசாயிகள் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசு அதிகாரிகள் பலா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருந்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என்று மாநில கூடுதல் தலைமைச் செயலா் தேவேந்தா் சிங் சனிக்கிழமை அறிவித்தாா். அக்குழு ஒரு மாதத்துக்குள் விசாரணையை நடத்தி மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அவா் தெரிவித்தாா்.

அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயியின் குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசின் உத்தரவையடுத்து, கா்னாலில் நடத்தி வந்த முற்றுகைப் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனா். மாநில அரசுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதால் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT