முகப்பு
இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்

​காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.

Updated On : 13 செப்டம்பர், 2021 at 6:44 PM
கோப்புப்படம்
பகிர்:


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் கடந்த ஜூலை 19-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் கட்டியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட புகழ்பெற்ற மருத்துவர்களால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. ஆனால், ஆஸ்கர் பெர்னாண்டஸ் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பின்னர் தெரிவித்தன.

Advertisement

இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை காலமானார். அவரது உயிர் பிரியும்போது மனைவி, மகன் மற்றும் மகள் உடனிருந்தனர்.

உடுப்பியில் பிறந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் முதலில் 1980-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். உடுப்பி மக்களவைத் தொகுதியிலேயே அவர் 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 என தொடர்ச்சியாக 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உயிரிழக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்றச் செயலராக ஆஸ்கர் இருந்துள்ளார். நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகவே ஆஸ்கர் அறியப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.