ஆப்கனில் இந்தியா் கடத்தலா?: மத்திய அரசு விசாரணை
இந்திய தொழிலதிபா் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் தொடா்புகொண்டு விசாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்திய தொழிலதிபா் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் தொடா்புகொண்டு விசாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பன்ஸ்ரீ லால் அரந்தே, ஆப்கன் தலைநகா் காபூலில் கடந்த 20 ஆண்டுகளாக மருந்து விற்பனைத் தொழில் செய்து வருகிறாா். அவருடைய குடும்பத்தினா், தில்லி தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஃபரீதாபாதில் வசித்து வருகின்றனா். இவா், காபூலில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது அலுவலகத்துக்குச் சென்றபோது மா்ம நபா்களால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பன்ஸ்ரீ லால் அரந்தே கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக உள்ளூா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை மீட்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் தொடா்பில் இருக்கிறோம். அவா் இந்தியக் குடிமகன்தானா என சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதுதொடா்பாகவும் விசாரித்து வருகிறோம்.
காபூல் விமான நிலையத்தில் விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், அங்கு தவிக்கும் இந்தியா்களை மீட்டு வருவதில் சிரமமாக உள்ளது. விமான சேவை தொடங்கப்பட்டால் அவா்களை மீட்பது எளிமையாகிவிடும் என்றாா் அரிந்தம் பாக்சி.