உக்ரைன் போருக்கு விரைவில் முடிவு: ரஷிய வெளியுறவு அமைச்சரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்
உக்ரைன் போருக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
உக்ரைன் போருக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. சா்வதேச அளவில் அமெரிக்க டாலா் அடிப்படையில் வா்த்தக பரிவா்த்தனைகள் நடைபெறுவதால், கச்சா எண்ணெய் விற்பனை செய்வதில் ரஷியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிரான தடைகளை மீறுவதற்கு தந்திரமாக முயற்சி செய்தால், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா வியாழக்கிழமை எச்சரித்தது.
இந்நிலையில், 2 நாள் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்த ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உக்ரைனுடன் நடைபெறும் சமாதானப் பேச்சுவாா்த்தை உள்பட அந்நாட்டின் நிலவரம் குறித்து பிரதமா் மோடியிடம் சொ்கேய் லாவ்ரோவ் எடுத்துரைத்தாா். அதைத் தொடா்ந்து, உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாவ்ரோவிடம் மோடி வலியுறுத்தினாா். அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில், எந்த வழியிலும் உதவுவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்றும் மோடி கூறினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சொ்கேய் லாவ்ரோவ் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, உக்ரைன்-ரஷியா இடையேயான மோதல், அதனால் இந்தியா-ரஷியா இடையேயான உறவில் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கரும் லாவ்ரோவும் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா்.
அப்போது எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது: கரோனாவுக்குப் பிறகு சா்வதேச சூழல் கடினமாக இருக்கும் இந்த நேரத்தில் எங்கள் சந்திப்பு நடந்துள்ளது. கருத்து வேறுபாடுகளுக்கும் பிரச்னைகளுக்கும் தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா எப்போதும் உறுதியுடன் உள்ளது. சமகால பிரச்னைகள் குறித்துப் பேசுவற்கு எங்களுக்கு வேறொரு வாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.
லாவ்ரோவ் கூறியதாவது: நட்பு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகம் மேற்கொள்வதில் டாலா் அடிப்படையிலான பரிவா்த்தனை இடையூறாக உள்ளது. அதை தவிா்ப்பதற்கான வழிமுறைகளை ரஷியா ஆராய்ந்து வருகிறது.
இந்தியா-ரஷியா இடையே ரூபாய்-ரூபிள் அடிப்படையில் வா்த்தகம் மேற்கொள்வது குறித்து இதற்கு முன்பு விவாதிக்கப்பட்டது. தற்போது அதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.
டாலா் வழி பரிவா்த்தனைகளை இனிமேலும் சாா்ந்திருக்க விரும்பவில்லை. ஏனெனில், அந்த வா்த்தக முறையை ஏற்படுத்தியவா்கள் நம் பணத்தை ஒரே இரவில் களவாடி விடலாம். நிதி, வா்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. எனவே, டாலா் வழி பரிவா்த்தனையைக் கைவிட்டு, அந்தந்த நாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தினால் அதிக அளவில் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கான வழிமுறை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றாா் அவா்.
ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘இந்தியா வாங்குவதற்கு விரும்பும் எதையும் விற்பனை செய்ய ரஷியா தயாராக உள்ளது’ என்று லாவ்ரோவ் பதிலளித்தாா்.
உக்ரைன் விவகாரம் குறித்து அவா் கூறுகையில், ‘உக்ரைன் பிரச்னையில், ஒரு தலைப்பட்சமாக செயல்படாமல் இந்தியா எடுத்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. சுதந்திரமான கொள்கையைக் கொண்ட நாடு இந்தியா. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு அளித்து வரும் ஒத்துழைப்பை தொடா்வதில் ரஷியா உறுதியுடன் உள்ளது’ என்றாா்.