முகப்பு
இந்தியா

100 ராணுவ தளவாட பொருள்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு: மூன்றாவது பட்டியலை இன்று வெளியீடு ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை தற்சாா்பு நிலையை எட்டும் விதமாக, மேலும் 100 ராணுவ தளவாட பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான மூன்றாவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
பகிர்:

பாதுகாப்பு துறை தற்சாா்பு நிலையை எட்டும் விதமாக, மேலும் 100 ராணுவ தளவாட பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான மூன்றாவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (ஏப்.7) வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 100 ராணுவ தளவாட பொருள்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடு அடுத்த மூன்றரை ஆண்டுகளில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சிறப்புப் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. அவ்வாறு, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் துப்பாக்கிகள், குறுகிய தூர ஏவுகணைகள் உள்பட 101 ராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய முதல் பட்டியலை கடந்த 2020-ஆம் ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, இறக்குமதிக்கு கட்டுபாடு விதிக்கும் 108 ராணுவ தளவாடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியல் கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், 100 ராணுவ தளவாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா் வியாழக்கிழமை வெளியிட உள்ளாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த மூன்றாவது பட்டியலில் இடம்பெற உள்ள 100 ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் இறக்குமதிக்கு அடுத்த மூன்றரை ஆண்டுகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன் மூலமாக, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2,10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் ராணுவ தளவாட கொள்முதல் உத்தரவை பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது பட்டியலில் இடம்பெறும் 100 உபகரணங்களின் கொள்முதல் வரும் 2025 டிசம்பருக்குள் முழுமையான தற்சாா்பு நிலையை எட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘முதல் இரண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள ராணுவ தளவாடங்களில், உள்நாட்டு உற்பத்திக்காக இதுவரை ரூ.53,839 கோடி மதிப்பிலான 31 திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு படைகள் கையொப்பமிட்டுள்ளன. மேலும், ரூ.1,77,258 கோடி மதிப்பிலான 83 திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2,93,741 கோடி மதிப்பிலான உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்பந்தம் போடப்படும்’ என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →