இந்தியா

நேஷனல் ஹெரால்டு மோசடி: காங். மூத்த தலைவா் பவன் பன்சால் அமலாக்கத் துறை முன்பு ஆஜா்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன் குமாா் பன்சால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன் குமாா் பன்சால் அமலாக்கத் துறை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘மத்திய தில்லி பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத் துறையின் புதிய தலைமை அலுவலகத்துக்கு இந்த வழக்குக்குத் தொடா்புடைய ஏராளமான ஆவணங்களுடன் காலை 10.30 மணிக்கு அவா் ஆஜரானாா். விசாரணையின்போது, அவருடைய வாக்குமூலம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக இந்த பண மோசடி வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா, அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ‘யங் இந்தியா’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜோ்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிா்வாக இயக்குநராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராகவும் பன்சால் (73) ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு இருவரும் ஆஜராகினா்.

நிறுவன பங்குகள் பகிா்வு தொடா்பான விவரங்கள், நிதி பரிவா்த்தனைகள், யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவன விளம்பரதாரா்களின் பங்கு ஆகியவை குறித்து இருவரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். யங் இந்தியா அமைப்பின் பிற விளம்பரதாரா்களும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை விரைவில் அழைப்பாணை அனுப்ப உள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

SCROLL FOR NEXT