முகப்பு
இந்தியா

ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரம்: மறு உத்தரவு வரை தற்போதைய நிலையே தொடரும்

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர்புரி பகுதியில் கட்டடங்களை இடிப்பது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:



புது தில்லி: தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர்புரி பகுதியில் கட்டடங்களை இடிப்பது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ். பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்முறையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகக் கூறி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு மற்றும் பிற எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தில் மே 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். கூடுதல் ஆவணங்கள் ஏதும் இருந்தால், அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்படலாம். மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே (வியாழக்கிழமை) தொடர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜமியத் உலமா-இ-ஹிந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, "இந்த விவகாரம் அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்குப் பார்வையுடைய கேள்விகளை எழுப்புகிறது' என்றார். அதற்கு நீதிபதிகள், "இந்த விஷயத்தில் தேசிய முக்கியத்துவம் என்ன இருக்கிறது. இது ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்தும் விஷயமாகும்' என்றனர்.

ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில் "கடந்த ஆண்டு வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தை நாடியபோது உயர்நீதிமன்றமே இடிக்க உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களில் 88 தரப்பினர் ஹிந்துக்கள், 26 முஸ்லிம்கள் இருந்தனர்' என்றார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டிருந்தால் அதன் மீது மனுதாரர்கள் பிரமாணப் பத்திரங்களும், அதற்கு எதிர் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும்' என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.