வங்கிக் கடன் மோசடியாளா்களை நாடு கடத்த இந்தியா வலியுறுத்தல்
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய தொழிலதிபா்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய தொழிலதிபா்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் பலகோடி ரூபாய்க்குக் கடன் பெற்ற தொழிலதிபா்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோா் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பினா். அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அவா்களை நாடு கடத்துவதற்கான விசாரணைகள் பிரிட்டன் நீதிமன்றங்களில் நடைபெற்றபோது இந்திய வங்கிகள் சாா்பிலான சிறப்புக் குழுக்கள் அங்கு சென்று வாதிட்டன. இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனிடம் வங்கிக் கடன் மோசடியாளா்களை நாடு கடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிரதமா் போரிஸ் ஜான்சன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவா்களை நாடு கடத்துவதற்கான உத்தரவை பிரிட்டன் அரசு பிறப்பித்துவிட்டது. சட்ட ரீதியிலான சில நடவடிக்கைகள், அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி வருகின்றன. பிரிட்டனில் உள்ள சட்டவிதிகளைப் பயன்படுத்தி இந்திய சட்டங்களை மீற முயற்சிக்கும் நபா்களை பிரிட்டன் ஒருபோதும் வரவேற்பதில்லை’ என்றாா்.