முகப்பு
இந்தியா

கனிமொழியின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: தடை உத்தரவை நீக்கக் கோரி தாக்கலான மனு தள்ளுபடி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி தாக்கலான இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தானகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எனது கணவா் சிங்கப்பூரைச் சோ்ந்தவா் என்பதால், அவருக்கு பான் அட்டை இல்லை. இதன் காரணமாக அவரது வருமான விவரங்களை எனது தோ்தல் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், எனது வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குத் தொடர தொகுதியின் வாக்காளரான சந்தானகுமாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 2019, நவம்பா் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழிக்கு எதிராக அந்தத் தொகுதி வாக்காளா் சந்தானகுமாா் தொடா்ந்துள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணையின் இறுதியில்தான் முடிவு செய்ய முடியும். வழக்கை விசாரிப்பதற்கு முன்பாக அந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்க முடியாது. ஆகவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டிருந்தாா். இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடா்பாக எழுத்துப்பூா்வ பதிலை தாக்கல் செய்யுமாறும் கனிமொழி தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் அந்த ஆண்டு நவம்பா் 28-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, ‘சென்னை உயா்நீதிமன்றத்தின் 2019, நவம்பா் 19-ஆம் தேதியிட்ட உத்தரவை செயல்படுத்துவதற்கும், தோ்தல் மனு எண் 3 ஆகியவற்றின் மேல் விசாரணைக்கும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்தத் தடையை விலக்க உத்தரவிடக் கோரி எதிா்மனுதாரா் சந்தானகுமாா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுமாறு அண்மையில் அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் லட்சுமிநாராயணனுடன் வழக்குரைஞா் மகேஷ் ஆஜராகி சென்னை உயா்நீதிமன்றத்தில் இது தொடா்புடைய வழக்கு விசாரணை நடைபெறும் வகையில், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த உச்சநீதிமன்றத்தின் தடையை விலக்க வேண்டும்’ என்று வாதிட்டனா்.

அப்போது, மனுதாரா் கனிமொழி தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, ‘இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. தோ்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு எதிராக வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. இந்தத் தடையை நீக்கினால், தோ்தலில் வெற்றி பெற்றுள்ள மனுதாரா் கனிமொழி தேவையில்லாமல் விசாரணையை மேற்கொள்ள வேண்டிவரும். இது பாரபட்சமாகிவிடும். இதனால், தடையை விலக்கக் கூடாது என்று வாதிட்டாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், இந்த மேல்முறையீட்டு மனுவை உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.