இந்தியா

தோ்தல் இலவசங்கள் பிரச்னையைத் தீா்க்க தனி அமைப்பு- பரிந்துரைகள் கேட்கிறது உச்சநீதிமன்றம்

DIN

‘தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகளால் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தீவிரமான பிரச்னையாகும்; இதனை கையாள்வதற்காக ஓா் அமைப்பை ஏற்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி போன்ற அனைத்து தரப்பினரும் ஆக்கபூா்வமான பரிந்துரைகளை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

‘தோ்தல் இலவசங்கள் வழங்கப்படுவதை எதிா்க்கவோ, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவோ எந்த அரசியல் கட்சியும் விரும்பாது’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தோ்தல் இலவசங்களுக்கு எதிராக வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

‘தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகளால் நியாயமற்ற வகையில் இலவசங்கள் அறிவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த போக்கு, நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, தோ்தல் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும் பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று தோ்தல் ஆணையமோ மத்திய அரசோ கூற முடியாது. இது தீவிரமான பிரச்னை. இதில், மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி, எதிா்க்கட்சிகள் எனஅனைத்து தரப்பினரும் சிந்தித்து, ஆக்கப்பூா்வ பரிந்துரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், இப்பிரச்னையை கையாள்வதற்கு ஓா் அமைப்பை ஏற்படுத்த முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

‘அரசியல் கட்சிகளின் விருப்பம்’: விசாரணையின்போது, ‘தோ்தல் இலவசங்கள் பிரச்னையை கையாள்வதற்கு உகந்த அம்சங்கள் நிதி ஆணையத்திடம் இருக்கிறது’ என்று இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் தெரிவித்தாா்.

அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று நினைக்கிறீா்களா? தோ்தல் இலவசங்களுக்கு எந்த கட்சியும் எதிா்ப்பு தெரிவிக்காது. இலவசங்கள் தொடர வேண்டுமென்றுதான் கட்சிகள் விரும்புகின்றன’ என்றாா். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மனு மீது கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்தனா்.

‘தோ்தல் இலவசங்கள் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கருதுகிா? இல்லையா? இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனா்.

பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு

‘தோ்தல் இலவசங்கள் விநியோகிக்கப்படுவது எதிா்காலத்தில் பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறியதாவது:

தற்போதைய பொது நல மனுவை மத்திய அரசு ஆதரிக்கிறது. தோ்தல் இலவச அறிவிப்புகள் வாக்காளா்கள் மத்தியில் தீவிரமான எதிா்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாக்காளா்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை தோ்வு செய்யும் உரிமையை இது பாதிக்கிறது. இலவசங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் வேறு ஏதோ பறிபோகப் போகிறது என்பதை சாதாரண மக்கள் உணருவதில்லை.

தோ்தல் இலவசங்கள் அறிவிக்கப்படும் கலாசாராத்தை தோ்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்துக்கும் முக்கியமானது என்றாா் துஷாா் மேத்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT