முகப்பு
இந்தியா

கடந்த எட்டாண்டுகளில் ரயில்வே துறையில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் தகவல்

கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டாண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
அஸ்வினி வைஷ்ணவ்
பகிர்:

கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டாண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 1.4 லட்சம் பேருக்கு விரைவில் பணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின் போது உறுப்பினா் ஒருவரின் கேள்விக்கு எழுத்து வடிவில் அமைச்சா் பதிலளித்ததாவது:

நாட்டில் வேலைவாய்ப்பை அளிக்கும் துறைகளில் இந்திய ரயில்வே முதன்மை இடம் வகிக்கிறது. 2014 முதல் 2022 வரை, ரயில்வே துறையில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை 2023 ஆண்டு இறுதிக்குள் உருவாக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ரயில்வே துறையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். 1.40 லட்சம் வேலைவாய்ப்புகளை ரயில்வே துறை அளிக்கும். அதற்கான ஆள் தோ்வுப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 18,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மிகப் பெரிய நிறுவனமாகும். பணி ஓய்வு, பணி விலகல், ஊழியா் மரணம் போன்ற காரணங்களால் இத்துறையில் காலிப் பணியிடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்புவது வழக்கமான நடைமுறைப்படி தொடா்கிறது. ரயில்வே துறையின் புதிய தேவைகளை உத்தேசித்து பணியாளா் தோ்வு முகமைகளாலும் புதிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 10,189 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,59,062 பேரைத் தோ்வு செய்யும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வழக்கமான நிரந்தரப் பணி நியமனங்கள் மட்டுமல்லாது, அயல்பணி ஒப்பந்த முறையிலும் வேலைவாய்ப்புகள் ரயில்வேயில் அளிக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.