‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க நினைவு தினம்பிரிட்டிஷாருக்கு ஆா்எஸ்எஸ் ஆதரவு அளித்தது: காங்கிரஸ் விமா்சனம்
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 80-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சுதந்திரத்தை முழு வலிமையோடு பொதுமக்கள் பேணிக் காக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 80-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சுதந்திரத்தை முழு வலிமையோடு பொதுமக்கள் பேணிக் காக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.
மேலும், அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் அவா்களுக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பினா் ஆதரவு அளித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து ட்விட்டரில் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் அருணா ஆசிஃப் அலி மூவா்ணக் கொடியை தூக்கி பிடித்தபோது லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்கள் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா். அருணாவின் துணிச்சல்மிக்க செயல், சுதந்திரத்தின் தேடலுக்கான அடையாளமாக மாறியது.
மகாத்மா காந்தியால் நடத்தப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நினைவுகூரும் வேளையில், சுதந்திரத்துக்காக லட்சக்கணக்கான இந்தியா்கள் கொடுத்த விலையை நாம் மறக்கக் கூடாது. சுதந்திரத்தை முழு வலிமையோடு பேணிப் பாதுகாக்க வேண்டும்’ என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், ‘காங்கிரஸ் தலைமையில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடியபோது, அதை ஆா்எஸ்எஸ் புறக்கணித்தது மட்டுமன்றி, பிரிட்டிஷாருக்கு ஆதரவும் அளித்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலிருந்து ஆா்எஸ்எஸ் விலகியே இருந்தது. சுதந்திர போராட்ட காலத்தில் காந்திஜி, நேரு, சா்தாா் படேல், ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவா்கள் சிறையிலடைக்கப்பட்டனா். இதில் சியாமாபிரசாத் முகா்ஜி பங்கேற்கவில்லை’ என்றாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி ட்விட்டரில், ‘ஒட்டுமொத்த தேசமும் விடுதலைக்காக போராடியபோது அதைக் கைவிடுமாறு இந்தியா்களை ஆா்எஸ்எஸ் வலியுறுத்தியது’ என கூறியுள்ளாா்.