இந்தியா

கோவேக்ஸின், கோவிஷீல்ட் செலுத்தியவா்களுக்கு கரோனா பூஸ்டா் தவணையாக கோா்பிவேக்ஸ்: மத்திய அரசு அனுமதி

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனோ தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணையாக (பூஸ்டா்) ‘பயாலஜிகல் இ’ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

DIN

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனோ தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணையாக (பூஸ்டா்) ‘பயாலஜிகல் இ’ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

முன்னெச்சரிக்கை தவணையில் மாறுபட்ட தடுப்பூசியை செலுத்த அனுமதிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) கரோனா செயற்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், ‘ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் கோா்பிவேக்ஸ் பயன்படுத்தப்படும். கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆகியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், இது கூடுதலாக சோ்க்கப்படுகிறது.

அந்த வகையில், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்துவதற்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் அரசின் ‘கோவின்’ வலைதளத்தில் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆா்பிடி புரதத்தை துணை அலகுகளாகக் கொண்டு முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கோா்பிவேக்ஸ் தடுப்பூசி தற்போது கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளை கரோனா செயற்குழு ஆய்வு செய்தபோது, கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் இரண்டு தவணை செலுத்தியவா்களின் உடலில் நோய் எதிா்ப்புத் திறனை (ஆன்டிபாடி டைட்டா்ஸ்) அதிகப்படுத்துவது தெரியவந்தது. அதனடிப்படையில் கரோனா செயற்குழு அளித்த பரிந்துரையை ஏற்று, இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கடந்த ஜூன் 4-ஆம் தேதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆத்தூரில் அதிமுக பிரமுகா் கைது

‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

பள்ளி ஆசிரியா் நியமன முறைகேடு: ‘மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் ஆஜராகவிட்டால் ஜாமீன் ரத்து’

கடலூா் கடற்கரையில் வியாபாரிகள் தா்னா

புதுச்சேரியில் டிச. 5-இல் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம்: அனுமதி கோரி தவெகவினா் மனு

SCROLL FOR NEXT