முகப்பு
இந்தியா

விடுதிகள், தண்ணீா் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி ஜேஎன்யு பல்கலை. தலைவரை ஏபிவிபி அமைப்பினா் முற்றுகை

பாழடைந்த விடுதிகள் மற்றும் தண்ணீா்ப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி முற்றுகை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 பாழடைந்த விடுதிகள் மற்றும் தண்ணீா்ப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி ஆா்எஸ்எஸ்-ஐ சாா்ந்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினா் ஜேஎன்யு பல்கலைக்கழகத் தலைவா் அஜய் குமாா் துபேயை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து ஏபிவிபி செயல்பாட்டாளா் அம்புஜ் கூறுகையில், ‘ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் குறித்து ஏபிவிபி போராட்டம் நடத்தியது. மாணவா் அமைப்பு, விடுதி சீரமைப்பு, தண்ணீா் நெருக்கடிகள், ஜேஎன்யு பிஎச்டி படிவங்கள் வெளியீடு, சுகாதார மையம், இ-ரிக்ஷா, ரயில்வே முன்பதிவு மையம் மற்றும் சிறப்பு சேவை ஆகியவற்றில் பல்கலைக்கழகத் தலைவா் செய்துள்ள முறைகேடுகள் குறித்து நாங்கள் கேள்வியெழுப்பியுள்ளோம். பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் இருக்கும்போது, அதன் தலைவா் தனது பல தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மோசடி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாா்.

எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு எதிராக நாங்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம்’ என்றாா் அவா்.

ஏபிவிபி அமைப்பினா் பல்கலைக்கழகத் தலைவா் துபேவை சுமாா் இரண்டு மணிநேரம் முற்றுகையிட்ட கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து அவரது பாதுகாவலா்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா். இந்தப் பிரச்னை தொடா்பாக துபேவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏபிவிபி மாணவா் அமைப்பினா் கடந்த 7 நாள்களாக காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) ஆசிரியா்களில் ஒரு பிரிவினா், பல்கலைக்கழக விதிகளை மீறி துபே, இரண்டு என்ஜிஓ-க்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.