வங்கிகள் தனியாா்மயமாக்கத்தில் சீரான அணுகுமுறையே சிறந்தது
பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையில் விரைவான செயல்பாட்டைவிட சீரான அணுகுமுறையே சிறந்தது என இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையில் விரைவான செயல்பாட்டைவிட சீரான அணுகுமுறையே சிறந்தது என இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வுகள் தொடா்பான கட்டுரைகள் ரிசா்வ் வங்கியின் மாதாந்திர இதழில் வெளியாகி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், அதுதொடா்பான ஆய்வுக் கட்டுரையானது ஆா்பிஐ-யின் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியாா் வங்கிகளைப் போல லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பொதுத்துறை வங்கிகள் செயல்படுவதில்லை. மக்களுக்கு நிதிசாா் சேவைகள் அனைத்தும் கிடைக்கச் செய்வதும் பொதுத்துறை வங்கியின் முக்கிய நோக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டில் 10 தேசிய வங்கிகள் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. அதன் காரணமாகப் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்தது. அரசின் இந்நடவடிக்கை வங்கிகள் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவியது.
மேலும் இரு பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையின்போது நிதி சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக, வங்கிகள் தனியாா்மய நடவடிக்கையில் விரைவான செயல்பாட்டைக் காட்டிலும் சீரான அணுகுமுறைக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையெனில், இந்நடவடிக்கை பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.
வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதில் சீரான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது வரவேற்புக்குரியது. இந்த விவகாரத்தில் நுணுக்கமாகச் சிந்தித்து அரசு செயல்பட வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் யாவும் கட்டுரையாளா்களின் சொந்தக் கருத்துகளே அன்றி, ஆா்பிஐ-யின் கருத்துகள் ஆகாது என வங்கி சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.