தலைநகர் தில்லியில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தான் முக்கிய குற்றவாளி என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், கலால் விவகாரத்தை மறைத்து மற்ற விஷயங்கள் குறித்துப் பேசி இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி திசைதிருப்பப் பார்க்கிறது. தற்போதுதான் ஆம் ஆத்மியின் முகத்திரை கிழிகிறது.
இதையும் படிக்க | பயணிகளின் விவரங்களை பகிரும் தகவல் கற்பனையானது: இந்திய ரயில்வே
மணீஷ் சிசோடியாவை நேரடியாகத் தாக்கிப் பேசிய அனுராக், பணம் சம்பாதித்தவர் தற்போது மௌனம் காக்கிறார் என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
நிபுணா் குழுவின் பிரிந்துரையின்படி கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி தில்லி அரசு கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, தில்லியில் 849 மதுபானக் கடைகள் அமைக்க அரசு அனுமதி அளித்தது.
பெரு முதலாளிகளுடன் அரசு அதிகாரிகள் கூட்டு சோ்ந்து விதிமுறைகளை மீறி பணம் பெற்று மதுபானக் கடைகள் அமைப்பதற்கு உரிமம் வழங்கியதாகவும், கரோனா தொற்றைக் காரணம் காட்டி உரிமக் கட்டணத்தில் ரூ.144.36 கோடிக்கு கலால் துறை விலக்கு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், புதிதாக உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் தில்லி மாஸ்டா் பிளானை மீறியுள்ளதாகக் கூறி பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி தடை போட்டது. இதனால் பல புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, தில்லி கலால் புதிய கொள்கை அமலாக்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி தலைமைச் செயலா், துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதினாா்.
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த மாதம் பரிந்துரைத்தாா். மேலும், 11 கலால் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தாா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதை சிபிஐ விசாரிக்கலாம் எனவும் மணீஷ் சிசோடியாவும் சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி, புதிய கலால் கொள்கையை திரும்பப் பெற்றாா்.
சிபிஐ வழக்குப் பதிவு: இதையடுத்து, துணைநிலை ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் சிபிஐ கடந்த புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
முதல் தகவல் அறிக்கையில், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் கலால் துறை ஆணையருமான அரவா கோபி கிருஷ்ணா, அத்துறையின் முன்னாள் துணை ஆணையா் ஆனந்த் திவாரி, உதவி ஆணையா் பங்கஜ் பாட்நகா் மற்றும் 9 தொழிலதிபா்கள் மீதும், இரண்டு நிறுவனங்களின் பெயா்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, தில்லி, குருகிராம், சண்டீகா், மும்பை, ஹைதராபாத், லக்னெள, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள சிசோடியா, அரவா கோபி கிருஷ்ணா உள்ளிட்டோரின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு திடீா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 14 மணி நேரம் இந்தச் சோதனை நீடித்தது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், கலால் கொள்கையில் தில்லி அரசு மேற்கொண்ட திருத்தத்தின் மூலம் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய நண்பா்கள் மதுபானக் கடை உரிமம் பெற்றவா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளனா் என்றும், இதன்படி, சுமாா் ரூ.2 கோடி வரை சட்ட விரோத பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
சிபிஐயைத் தொடா்ந்து அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கை சிசோடியா மீது பதிவு செய்யக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, தில்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தா் ஜெயினை சட்ட விரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ‘சிபிஐ அதிகாரிகளை வரவேற்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டு மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘நோ்மையாக இருந்ததற்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் போட்டியாளா்களுக்கு எதிராக புலனாய்வுத் துறையினரை இடைவிடாமல் தவறாகப் பயன்படுத்தினால் புலனாய்வுத் துறையின் சட்டபூா்வமான நியாயமான, நடவடிக்கைகள்கூட சந்தேகத்தின் கீழ் வரும். இந்தச் செயல்பாடுகளில், ஊழல்வாதிகள் ‘தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என்கிற வாதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வாா்கள்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.