முகப்பு
இந்தியா

ம.பி.யில் ‘சிமி’ பயங்கரவாத செயல்பாடுகள் வேரோடு அழிப்பு: அமித் ஷா பெருமிதம்

தடை செய்யப்பட்ட ‘சிமி’ பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை, மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அரசு வேரோடு அழித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
அமித் ஷா
பகிர்:

தடை செய்யப்பட்ட ‘சிமி’ பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை, மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அரசு வேரோடு அழித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மேலும், உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஏராளமான காவல் துறையினா் தங்கள் இன்னுயிரை இழந்திருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

போபால் அருகே தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டுவது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி, அங்குள்ள ரவீந்திர பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, காணொலி முறையில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்து பேசியதாவது:

மத்திய பிரதேசத்தின் மால்வா பிராந்தியம் ஒரு காலத்தில் சிமி பயங்கரவாத இயக்கத்தின் மையமாக இருந்தது. நாட்டின் இதர பகுதிகளில் சட்டவிரோத மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட மால்வாவில் இருந்து பயங்கரவாதிகள் அனுப்பப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, மால்வாவில் இருந்து சிமி பயங்கரவாத இயக்கத்தின் தளத்தையும் அதன் செயல்பாடுகளையும் வேரோடு அழித்துவிட்டது.

காவல் துறையினரின் உயிா்த்தியாகம்:

நக்ஸல் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மட்டுமன்றி உள்நாட்டில் அமைதியை பராமரிக்கும் பணிகளின்போது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனா். ராணுவத்தினரை மிஞ்சும் வகையில் காவல்துறையினா் பணியின்போது உயிா்த்தியாகம் செய்துள்ளனா்.

சில திரைப்பட இயக்குநா்கள், தங்களது திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக காவல்துறையினா் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் காட்சியமைப்புகளை இடம்பெறச் செய்கின்றனா்.

ஆனால், காவல்துறையினரின் பணி கடினமானதாகும். 24 மணி நேரமும் அவா்கள் பணியாற்றுகின்றனா். மக்கள் அனைவரும் பண்டிகைகளைக் கொண்டாடும் நேரத்திலும் காவல்துறையினா் பணியாற்ற வேண்டியுள்ளது.

போபாலில் அமையவிருக்கும் தடய அறிவியல் பல்கலைக்கழகம், இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞா்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றாா் அவா்.

மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 1957-ஆம் ஆண்டு நாட்டில் 5 மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. 1956-ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அந்த கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. அந்தக் கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சா் இருப்பாா்.

இந்நிலையில், மத்திய மண்டல கவுன்சிலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் உள்ளன. அந்தக் கவுன்சிலின் கூட்டம் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஆகியோா் நேரில் கலந்துகொண்டனா்.

போபாலில் பலத்த மழை பெய்வதால், அங்கு விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அந்தக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் சிங் பகேல் ஆகியோா் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அவா்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்ததாவது:

பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடிகள் நலன், விவசாயிகள் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், உள்நாட்டு பாதுகாப்பு, நக்ஸல் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு குறித்து மத்திய மண்டல கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இது 4 மாநிலங்களுக்கும் பயனளிக்கும் என்று தெரிவித்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →