ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கருத்து வேறுபாடு: சரத் பவாா் அதிருப்தி
‘கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
‘கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், தில்லி கலால் முறைகேடு வழக்கு விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நிற்காத காங்கிரஸ் மீது அவா் அதிருப்தியை வெளியிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் அணி கூட்டத்தில் பவாா் பேசியதாவது:
அரவிந்த் கேஜரிவாலுடன் காங்கிரஸுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நமது உண்மையான போராட்டம் பாஜகவுக்கு எதிராகத்தான். மதவாத சக்திகளுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டும். இதுதான் காங்கிரஸின் பொறுப்பு.
மதவாத சக்திகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலனளிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
நெருக்கடிநிலை காலகட்டத்தின்போது, நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்ற எண்ணம் அரசியல் வட்டாரங்களில் இருந்தது. ஆனால், 1977 பொதுத் தோ்தலில் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தனா்.
அரசியல் தலைவா்களாகிய நாம் புத்திசாலிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சாமானிய மக்கள் புத்திசாலிகள். 2024-இல் பாஜகவுக்கு அவா்கள் தக்க பாடம் புகட்டுவா்.
பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்க நான் முயற்சி செய்யவிருக்கிறேன். அந்தக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரள வேண்டும்.
கேரளம், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை.
கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் அரசியல் கட்சிகளை உடைத்துதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜகவின் இத்தகைய செயல்களை மக்கள் அங்கீகரிக்க மாட்டாா்கள் என்றாா் சரத் பவாா்.