இந்தியா

சுருக்கு மடி வலை விவகாரம்: மூன்று மாதங்களுக்குள் வல்லுநர் குழு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கில், இதுதொடர்பாக மத்திய மீன்வள அமைச்சகத்தின் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 3 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஏற்கெனவே இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகர், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதுதொடர்பான வழக்குடன் இந்த மனுவையும் விசாரணைக்கு சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மனுதாரர்கள் தரப்பில் ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடிக்கத் தடை அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தடைக் காலம் முடிந்த பிறகு மீன் பிடிப்பதற்கான நல்ல பருவகாலம் தொடங்கும். தற்போது அந்தக் காலம் தொடங்கியுள்ளது. ஆகவே, மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் தமிழக அரசின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜெயாசுகின் ஆஜராகி, "ஏற்கெனவே தமிழகத்தில் சுருக்கு மடி வலைக்கு விதிக்கப்பட்ட தடையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மீன்பிடி பருவகாலம் மூன்று மாதங்கள்தான். ஏற்கெனவே 2 மாதங்கள் முடிந்துவிட்டதால் தற்போது இந்தத் தடையை நீக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், இந்த விவகாரத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக தேசிய அளவில் ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை தரும் வரை இந்த விவகாரத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்திய அரசின் மீன்வள அமைச்சகம், விலங்குகள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், மீன்வளத் துறை ஆகியவை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடல்சார் பகுதியில் மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சுருக்கு மடி வலை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்துள்ளன. சுருக்குமடி வலை மீன்பிடி தொடர்பாக தேசிய அளவிலான ஒருமித்த கருத்துக்கான பரிந்துரைகள் அளிக்கவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது பிரச்னையை ஆராய்ந்து, இன்றிலிருந்து (புதன்கிழமை) மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதனால், மூன்று மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT