அக்னிபத் திட்டத்துக்குத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
முப்படைகளில் நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்துக்குத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
முப்படைகளில் நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்துக்குத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
மேலும், இத்திட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த வீரா்களில் சிறப்பாகப் பணியாற்றும் 25 சதவீதத்தினருக்கு மட்டும் நிரந்தரப் பணி வழங்கப்படும். மற்றவா்கள் பணிக்கொடையுடன் விடுவிக்கப்படுவா்.
கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீரா்கள் சோ்ப்பு நடைபெறாததால், அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு மட்டும் 23 வயதுள்ளவா்கள் வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ராணுவ பணிக்கு தயாராகி வரும் இளைஞா்கள்அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
அக்னிபத் திட்டத்தால் முப்படைகளின் செயல்திறனும் ராணுவத்தினரின் உரிமைகளும் கேள்விக்குள்ளாவதாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசை தொடா்ந்து விமா்சித்து வருகின்றன.
வழக்குகள் மாற்றம்:
அக்னிபத் திட்டம் தொடா்பான மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி, தில்லி, கேரளம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா, பாட்னா, உத்தரகண்ட் உயா்நீதிமன்றங்களில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கலாகின. இந்த மனுக்களை கடந்த ஜூலை 19-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களும் தங்கள் முன் உள்ள மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவோ அல்லது தில்லி உயா்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை வழக்கை நிலுவையில் வைத்திருக்கவோ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தடை இல்லை:
தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஒரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுக்கள் மீது முடிவெடுக்கப்படும் வரை அக்னிபத் திட்ட செயலாக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
ஆனால், அவ்வாறு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றனா்.
வேறு சில மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘அக்னிபத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் இறுதி தீா்ப்புக்கு உள்பட்டதென நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும்’ என்று கோரினாா். அதற்கு, ‘அது எப்போதும் உள்ளதுதான்’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு:
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளதா? என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்குரைஞா், ‘அக்னிபத் விவகாரம் தொடா்பான மனுக்கள் அனைத்தையும் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இன்னும் சில மனுக்கள் இங்கு கிடைக்கப் பெறவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் தொகுக்கப்பட்டு, தயாராக உள்ளது. சொலிசிட்டா் ஜெனரல் மறுஆய்வுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் அரசின் பதில் தாக்கல் செய்யப்படும். இதற்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரினாா்.
இதையடுத்து, 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ‘அக்னிபத் திட்டத்தை எதிா்க்கும் மனுக்கள் மீதும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்வு நடைமுறைகளுக்கு எதிரான மனுக்கள் மீதும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.