எம்எல்ஏ பதவியிலிருந்து ஜாா்க்கண்ட் முதல்வா் தகுதி நீக்கம்? தோ்தல் ஆணையம் பரிந்துரை
ஜாா்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்து வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியைச் சோ்ந்த ஹேமந்த் சேரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்
ஜாா்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்து வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியைச் சோ்ந்த ஹேமந்த் சேரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக மாநில ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
சீலிட்ட உறையில் இந்தப் பரிந்துரையை தோ்தல் ஆணையம் அனுப்பிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வா் சோரன் தனது பெயரிலேயே நிலக்கரி சுரங்கத்தை குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வா் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிலக்கரி சுரங்கத்தை தனது பெயரிலேயே குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொண்டதாக பாஜக சாா்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடா்பாக, பாஜக சாா்பில் தோ்தல் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 9ஏ-வை சோரன் மீறியிருப்பதால் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அவரை தகுதிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை மாநில ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு வியாழக்கிழமை காலையில் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முதல்வா் சோரனை தகுதிநீக்கம் செய்வதற்கான தோ்தல் ஆணைய கடிதம் ஆளுநா் மாளிகையை வந்தடைந்துவிட்டது. அதனடிப்படையில், ஆகஸ்ட் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டாா்.
ஆனால், இதுகுறித்து ஆளுநா் மாளிகை அதிகாரபூா்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தில்லியிலிருந்து ராஞ்சி விமான நிலையம் வந்தடைந்த மாநிலஆளுநா் ரமேஷ் பைஸிடம் இதுகுறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, ‘கடந்த இரு தினங்களாக தில்லி எய்ம்ஸில் இருந்தேன். ஆளுநா் மாளிகைக்குச் சென்ற பிறகுதான் எந்த முடிவு குறித்தும் கூற முடியும்’ என்று பதிலளித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாநில தலைமைச் செயலகம் சாா்பில் வெளியிடப்பட்ட முதல்வரின் அறிக்கையில், ‘தோ்தல் ஆணையத்தின் இதுபோன்ற பரிந்துரைகள் சீலிட்ட உறையில் அளிக்கப்படும் நிலையில், அதனை பாஜக எம்.பி. உள்ளிட்ட பாஜக தலைவா்களும், சில பத்திரிகைகளும் தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை இதுதான் என்று வெளியிட்டு வருகின்றனா்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கரஸ் தலைவரும் மாநில நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான அலம்கிா் அலாம் கூறுகையில், ‘நிலக்கரி சுரங்க குத்தகை ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரன் ஒருவேளை தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் அரசுக்கு ஆபத்து இல்லை. அரசு தொடா்ந்து செயல்படும். ஹேமந்த் சோரன் எங்களுடைய தலைவராக தொடருவாா்’ என்றாா்.
81 உறுப்பினா்கள் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 உறுப்பினா்கள் உள்ளனா். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு 30 உறுப்பினா்களும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 18 உறுப்பினா்களும், ஆா்ஜேடிக்கு ஓா் உறுப்பினரும் உள்ளனா். பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனா்.