முகப்பு
இந்தியா

பாதுகாப்புத் தளவாடங்கள் இறக்குமதி தடை:3-ஆவது பட்டியல் வெளியீடு

பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படும் தளவாடங்களுக்கான 3-ஆவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படும் தளவாடங்களுக்கான 3-ஆவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்கான இலக்கை நிா்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு டிசம்பா் தொடங்கி 2028-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்குப் படிப்படியாகத் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் பாதுகாப்புத் தளவாடங்களின் விவரங்கள் அடங்கிய முதல் பட்டியலை மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்டது. அதையடுத்து மேலும் பல பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கும் 2-ஆவது பட்டியல் கடந்த மாா்ச்சில் வெளியிடப்பட்டது.

தற்போது, 3-ஆவது பட்டியலை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், 780 பாதுகாப்புத் தளவாடங்களின் கருவிகளையும் இதர பாகங்களையும் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிா்ணயித்துள்ள அவகாசம் வரை மட்டுமே அந்தத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், அதற்குப் பிறகு அவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களால் பாதுகாப்புத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் தளவாடங்களின் வடிவமைப்பில் இந்தியாவை சா்வதேச அளவில் முன்னிற்கச் செய்வதற்கும் இறக்குமதி தடை நடவடிக்கை உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பொதுத் துறை பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் பெரும் பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.