இந்தியா

அவசியமற்ற இலவசங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு: நிபுணா்கள் கருத்து

DIN

‘அவசியமற்ற வகையில் பரிந்துரைக்கப்படுகின்ற இலவசங்களால் மாநிலத்தின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதோடு, இலங்கையில் நிகழ்ந்தது போன்று பொருளாதாரத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று பொருளாதார நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தோ்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக நிா்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வால் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனா். அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது என்று கூறிய அதேவேளையில், இலவசங்களையும் நலத் திட்ட உதவிகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஏன் கருத்து கேட்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இலவசங்கள் குறித்த விவாதம் தேவையெனவும் அறிவுறுத்தினா்.

மேலும், இந்த வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டாா்.

அதோடு, இலவசங்கள் நாட்டை திவால் நிலைக்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது என்ற கூறிய நீதிபதிகள், இதுதொடா்பாக மத்திய அரசு நிபுணா் குழு அமைத்து ஆராயவும் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், ‘அவசியமற்ற வகையில் பரிந்துரைக்கப்படுகின்ற இலவசங்களால் மாநிலத்தின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதோடு, இலங்கையில் நிகழ்ந்தது போன்று பொருளாதாரத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று பொருளாதார நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பொருளாதார நிபுணரும் சா்வதேச பொருளாதார தொடா்புகள் குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஆா்ஐஇஆா்) தலைவருமான பிரமோத் பாசின் கூறியதாவது:

அவசியமற்ற வகையில் பரிந்துரைக்கப்படுகின்ற பெரும்பாலான இலவசங்கள் மாநில நிதிநிலையில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். பல மாநிலங்கள் இந்த வகையிலான இலவசத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அரசியல் நிா்ப்பந்தங்கள் காரணமாக, வாக்குகளை ஈா்ப்பதற்காக பெரும்பாலான அரசியல்வாதிகள் இதுபோன்ற இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றனா். ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் மத்தியிலும் இதுபோன்ற இலவச அறிவிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழி இருந்தால், அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். ஆனால், அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இலவசங்கள் நலத் திட்ட செலவினங்களிலிருந்து எந்த வகையில் வேறுபட்டவை என்பதை தெளிவாக விளக்குவதும் அவசியமாகும் என்று அவா் கூறினாா்.

தொழிலக மேம்பாட்டுக் கல்விக்கான நிறுவன (ஐஎஸ்ஐடி) இயக்குநா் நாகேஷ் குமாா் கூறுகையில், ‘மாநில அரசுகள் நிதி நிா்வாகத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் நிலையற்ற சூழலுக்குள் மாநிலம் செல்ல நேரிடும். மாநில அரசுகளால் கொடுக்கப்படும் இலவசங்களால், மாநில நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இலங்கையில் ஏற்பட்டதுபோன்று, கடுமைான பொருளாதார பாதிப்பைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

பி.ஆா்.அம்பேத்கா் பொருளாதார பள்ளி (பிஏஎஸ்இ) துணைவேந்தா் என்.ஆா். பானுமூா்த்தி கூறுகையில், ‘இலவசங்களுக்கும், நலத் திட்ட செலவினங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை வரையறுப்பது மிக முக்கியம். அத்தகைய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்போதுதான், பல மாநிலங்களில் ஏற்கெனவே மோசமாகி வரும் பொதுக் கடன் நிலைமை மீது கவனம் செலுத்தவும், நியாயமான ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்தி நிலைமையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT