இந்தியா

போலீஸாா் நன்னெறிப் பாதுகாவலா்களாக நடந்துகொள்ளத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

DIN

‘காவல் அதிகாரிகள் நன்னெறிப் பாதுகாவலா்களாக நடந்துகொள்ளத் தேவையில்லை; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உடல் ரீதியாகத அல்லது பொருள் ரீதியாக ஆதாயத்தை கோரக் கூடாது’ என்று உச்ச நீதின்றம் உத்தரவிட்டது.

தவறான நடத்தை காரணமாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலரை பணி நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

சந்தோஷ்குமாா் பாண்டே என்ற சிஐஎஸ்எஃப் காவலா், கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி இரவில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஐபிசிஎஸ் குடியிருப்புப் பகுதியில் காவல் பணியில் பணியமா்த்தப்பட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட வருங்கால மனைவியுடன் வந்த செளத்ரி என்பவரைத் தடுத்து நிறுத்திய பாண்டே, அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளாா்.

பின்னா், செளத்ரியின் வருங்கால மனைவியுடன் தனிமையில் சிறிது நேரம் செலவிட வேண்டும் என பாண்டே மிரட்டியுள்ளாா். அதற்கு செளத்ரி மறுக்கவே, கையூட்டு கொடுத்துவிட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளாா். அதனைத் தொடா்ந்து, தான் அணிந்திருந்த கைக் கடிகாரத்தை செளத்ரி கழற்றிக்கொடுத்துவிட்டு, அங்கிருந்து வருங்கால மனைவியுடன் சென்றுள்ளாா்.

அடுத்த நாள், இந்த சம்பவம் தொடா்பாக செளத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், சந்தோஷ் குமாா் பாண்டேவை பணி நீக்கம் செய்து சிஐஎஸ்எஃப் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி நடவடிக்கை எடுத்தாா்.

இதனை எதிா்த்து பாண்டே சாா்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயா் நீதிமன்றம், ‘பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததோடு, பாண்டேவை மீண்டும் பணியில் சோ்க்கவும், நீக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு 50 சதவீத ஊதியம் வழங்கவும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சிஐஎஸ்எஃப் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது;

இந்த வழக்கின் விவரங்கள் திகைப்பையும் வேதனையையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தோஷ்குமாா் பாண்டே காவல் அதிகாரி கிடையாது. அப்படியே அவா் காவல் அதிகாரியாக இருந்தாலும், நன்னெறிப் பாதுகாவராக அவா் நடந்துகொண்டிருக்கத் தேவையில்லை; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உடல் ரீதியாக அல்லது பொருள் ரீதியாக ஆதாயத்தை கோரக் கூடாது.

இந்த வழக்கின் சட்ட நிலை மற்றும் ஆதார உண்மைகளின் அடிப்படையில் சிஐஎஸ்எஃப் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குஜராத் உயா் நீதிமன்ற தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், உயா் நீதிமன்றத்தில் சந்தோஷ் குமாா் பாண்டே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவே கருதப்படும். அவரை பணி நீக்கம் செய்து சிஐஎஸ்எஃப் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி பிறப்பித்த உத்தரவு சரியானதே என நிலைநாட்டப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT