தலைநகர் தில்லியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காலை வேளையிலும், இரவிலும் பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிகாலையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அடர்ந்த மூடுபனி 150 மீட்டராகக் குறைந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதித்துள்ளது.
இதுதொடர்பாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
அடர்ந்து மூடுபனி காரணமாக சுமார் 20 ரயில்கள் 15 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. அறிவிப்புகள் மற்றும் பிற வழிகள் மூலம் பயணிகளுக்கு அட்டவணைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், விமானச் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் முதல் கிழக்கு உத்தரப் பிரதேசம் வரை, அதைத்தொடர்ந்து ஹரியாணா மற்றும் தில்லி முழுவதும் அடர்த்தியான மூடுபனி படர்ந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலம் விமான நிலையத்தில் அதிகாலை 3:30 மணி முதல் 6 மணி வரை பார்வைத் திறன் 150-200 மீட்டராகக் குறைந்து, காலை 7 மணிக்குள் 350 மீட்டராக மேம்பட்டதாக ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமிர்தசரஸ், பாட்டியாலா, பரேலி, லக்னௌ மற்றும் பஹ்ரைச் ஆகிய இடங்களில் அதிகாலையில் 25 முதல் 50 மீட்டர் வரை பார்வை நிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் உள்ள சமவெளிகளில் அடர்த்தியான மற்றும் மிக அடர்த்தியான மூடுபனி இருக்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.