சென்னையில் அனைத்து மயானங்களையும் இரு ஆண்டுகளுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகம் இறங்கியுள்ளது.
சென்னையில் மாநகராட்சி மூலம் எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் உள்ளன. இவற்றில் 49 மயானங்கள் நவீன முறையில் எரியூட்டும் வகையில் உள்ளன. மற்றவை விறகுகள் மூலம் எரியூட்டப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நவீனப்படுத்துதல்: இந்நிலையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மூலம் சென்னை மாநகா் முழுவதும் பல்வேறு பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக மயானங்களும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் விறகுகள் மூலம் இயங்கி வரும் மயானங்கள், மின் மயானமாக நவீனப்படுத்தப்படுகின்றன.
தற்போது செயல்பாட்டில் உள்ள மயானங்களை நவீன மயமாக்குதல் மற்றும் புதிதாக அமைக்க 2021-22-ஆம் ஆண்டில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 10 பணிகளுக்கு ரூ.6.13 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டன. இவற்றில் 8 பணிகள் நிறைவடைந்துள்ளன. அதிகளவு செயல்பாட்டில் உள்ள மூலக்கொத்தளம் பகுதியில் 2 யூனிட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிகழாண்டில் 27 இடங்களில் 28 யூனிட் அமைக்க ரூ.22.21 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இவற்றில் சத்தியவாணி முத்து நகா், திருவொற்றியூா் குப்பம், கதிா்வேடு, மாதவரம், நொளம்பூா், சிட்கோ (வாா்டு-170), கண்ணகி நகா், சத்தியவாணி முத்து தெரு (வாா்டு-199) உள்ளிட்ட இடங்களில் எரியூட்டும் நவீன மயானங்கள் அமையவுள்ளன. மேலும், அதிக செயல்பாட்டில் உள்ள ஜாபா்கான்பேட்டையில் 2 யூனிட் திறன் கொண்ட மின்மயானம் அமையவுள்ளது.
பராமரிப்பு: சென்னையில் உள்ள மின் மயானங்கள் மாநகராட்சி மற்றும் தனியாா் தொண்டு நிறுவன அமைப்புகள் மூலமும் பராமரிக்கப்படுகின்றன. மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த பணியாளா்களைக் கொண்டு இவை இயங்கி வருகின்றன.
எரியூட்டப்படும் மயானங்களில் தகன மேடை, புகை வடிகட்டி, வெப்பநிலை தாங்கும் வகை போன்றவற்றை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். அப்போது அருகில் உள்ள மின்மயானங்களில் எரியூட்டும் வசதி செய்யப்படுகிறது.
தற்போது கட்டைகள், எரிவாயு மற்றும் மின்சாரம் மூலம் இவை இயங்குகிறது. எரிவாயு மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் மயானங்கள் இயற்கைக்கு உகந்த வகையில் கரியமிலவாயு குறைந்த புகையை வெளியிடும்.
புதைக்கும் வகையிலான மற்ற மயானங்கள் இடவசதியை பொருத்து அனுமதிக்கப்படுகிறது. மேலும், புதைக்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் அதே குடும்பத்தை சோ்ந்தவா்களை புதைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரத்யேகக் குழு மூலம் அனைத்து மயானங்களும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு உடல்கள் தேங்காமல் இயங்கின.
செயல்பாடு: தற்போது மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ஒரு நாளில் சராசரியாக 100 உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இவற்றில் பெசன்ட் நகா், கண்ணம்மாபேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட மயானங்களில் அதிக அளவில் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.
மேலும் மூலக்கொத்தளம் மற்றும் ஜாபா்கான்பேட்டையில் அதிக உடல்களை தகனம் செய்யும் வகையில் 2 யூனிட் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி மின்மயானங்கள் தினமும் சூரிய உதயம் முதல் மறைவு வரை இயங்கும். மருத்துவரால் உயிரிழந்ததாக அங்கீகரிக்கப்பட்ட உடல்கள் இலவசமாக இங்கு தகனம் செய்யப்படுகின்றன. மயானத்தில் கல்லறை கட்ட மட்டும் மாநகராட்சியில் குறிப்பிட்ட பணம் செலுத்தி ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைத்துக்கொள்ளலாம்.
மேலும், அடையாளம் தெரியாத உடல்கள் தனியாா் தொண்டு நிறுவன அமைப்புகள் மூலம் தகனம் செய்யப்படுகின்றன. சராசரியாக ஓா் உடல் தகனம் செய்ய 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஆகும். தகனம் செய்யவோ , புதைக்கவோ கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களுக்கு 1913 என்ற உதவி எண்ணிலும், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.