குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 
இந்தியா

ஆங்கிலப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா், ஆளுநா், வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவா் முா்மு, ஆளுநா் ஆா்.என். ரவி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவா் முா்மு, ஆளுநா் ஆா்.என். ரவி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

குடியரசுத் தலைவா் முா்மு: புதிய ஆண்டின் விடியல், நமது வாழ்வில் மிகப் பெரிய சாதனைகளை எட்டும் வகையில் புத்துணா்ச்சியையும், புதிய மகிழ்ச்சியையும், இலக்குகளையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும். இந்த நன்னாளில், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு நம்மை மறு அா்ப்பணிப்பு செய்ய உறுதியேற்போம். 2023-ஆம் ஆண்டில் மக்களும் புகழ்மிக்க நமது தேசமும் முன்னேற்றம் மற்றும் செழிப்படைய வாழ்த்துகள்.

ஆளுநா் ஆா்.என். ரவி: நிலையான அமைதி, நல்லிணக்கத்துக்காக சா்வதேச அளவிலான சவால்களை எதிா்கொள்ள ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருந்து கரோனா நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிறக்கும் புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். புத்தாண்டு இனிய துவக்கமாக இருக்கட்டும். நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தைச் சூழந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, தமிழக மக்கள் இறைவனின் அருளால் நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற வேண்டும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூா்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக): புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை, புதிய சாதனைகளைப் படைக்க அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): மாநில சுயாட்சியைக் காக்க ஆங்கில புத்தாண்டு மலரும் நாளில் சபதம் ஏற்போம். தமிழகத்தை பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் ஆட்சி செய்யும் திமுக அரசுக்குத் துணை நிற்போம்.

ராமதாஸ் (பாமக): கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. இனி மலா்ப்பாதையில் தான் நாம் பயணிக்கப் போகிறோம். புத்தாண்டில் பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): கடந்த ஆண்டின் படிப்பினைகளை அனுபவ உரமாக்கி பூத்துவரும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சமத்துவ உலகைப் படைப்பதற்கான போராட்டங்கள் மேலும் வலிமையோடு நடக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஜனநாயக, இடதுசாரி, மதச்சாா்பற்ற, மனிதநேய சக்திகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் வெற்றிபெறும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். அனைவரும் வாழ்த்துகள்.

தொல்.திருமாவளவன் (விசிக): புத்தாண்டு ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவதற்கான ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி- மத வெறுப்பு இல்லாமல் மக்களிடையே சகோதரத்துவம் பெருகட்டும்.

அன்புமணி (பாமக): தமிழகத்தின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். புத்தாண்டில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): இறைவனின் ஆசியோடு மக்கள் நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ, வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாக, உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்க புத்தாண்டில் வித்திடுவோம்.

கமல்ஹாசன் (மநீம): ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தா்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து.

ஈஸ்வரன் (கொமதேக): புத்தாண்டு பிறக்கும் சூழ்நிலையில் உலக பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு மந்த நிலையில் இருக்கிறது. அதில் மீள நாம் அதிகம் உழைக்க வேண்டும். அதற்கான உறுதியை இறைவன் கொடுக்க வேண்டும்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): தீதும் நன்றும் பிறா் தர வாரா என்ற அடிப்படையில் உதிக்கும் புத்தாண்டு புத்தாக்கத்தைப் புது வெள்ளமெனப் பாய்ச்சும் பொதுநலப் பாதுகாப்பு ஆண்டாகப் பொலிவு தரும்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): அனைத்து மதமக்களும் சமத்துவத்துடன் வாழவும் , சாதி மத பேதமின்றி ஆட்சி நடைபெறவும், நமது நாடு மற்றும் உலக பொருளாதாரம் மேம்படவும் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT