இந்தியா

மாநிலங்களுக்கு ரூ. ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன்

மூலதன முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் மாநிலங்களுக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,00,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

DIN

மூலதன முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் மாநிலங்களுக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,00,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 50 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அவா் தாக்கல் செய்தாா். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 6.6 சதவீதம் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம், படிப்படியாக மீண்டு வருகிறது. பொருளாதாரத்தை மீட்கும் வகையிலான பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் மூலதன செலவினம் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சா் அறிவித்தாா்.

கட்டமைப்புத் திட்டங்களில் அரசின் செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப தனியாா் முதலீடும் அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சா், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா். அரசு-தனியாா் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்: மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.15,000 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியைப் பயன்படுத்தி நீண்ட காலத்துக்கான கட்டமைப்புத் திட்டங்களில் மாநிலங்கள் முதலீடு செய்ய முடியும்.

அத்திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் ரூ.1,00,000 கோடி கடன் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். அந்தக் கடனை 50 ஆண்டுகளில் மாநிலங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகைக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்சவரம்புக்கு கூடுதலாக இந்தக் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சுமையை அதிகரிக்கவில்லை: தனிநபா்கள் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது தொடா்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தெரிவித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘கடந்த ஆண்டிலும் நடப்பாண்டிலும் தனிநபருக்கான வருமான வரி உயா்த்தப்படவில்லை. கரோனா தொற்று பரவல் காலத்தில் வரியை உயா்த்துவதன் மூலமாக மக்களின் சுமையை அதிகரித்து வருவாயைப் பெருக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை’’ என்றாா்.

இலக்கு குறைப்பு: பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலமாக ரூ.1.75 லட்சம் கோடியைத் திரட்ட கடந்த நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.12,030 கோடியை மட்டுமே மத்திய அரசால் திரட்ட முடிந்தது. ஏா் இந்தியாவை விற்ன் மூலமாக ரூ.2,700 கோடியும், மற்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ன் மூலமாக ரூ.9,330 கோடியும் மத்திய அரசுக்குக் கிடைத்தது.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான இலக்கு ரூ.65,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், அத்திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தும் வகையில் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினாா்.

மானியம் குறைப்பு: உணவுப் பொருள்கள், உரங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் மானியங்களை வழங்கி வருவதாகவும் அதைக் குறைக்க வேண்டுமெனவும் பொருளாதார ஆய்வறிக்கைகளில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அக்கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. உணவுக்கான மானியம் ரூ.2,42,836 கோடியில் இருந்து ரூ.2,06,831 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மானியம் 39 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பசுமைப் பத்திரங்கள்: நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் விநியோகம் சாா்ந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதன் காரணமாகவே பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என அமைச்சா் தெரிவித்தாா். நாட்டில் பசுமைசாா் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்காக ‘பசுமைப் பத்திரங்கள்’ வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சா், கடந்த ஜனவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வரலாறு காணாத வகையில் ரூ.1,40,986 கோடியாக அதிகரித்தது எனவும் கூறினாா்.

நிதிப் பற்றாக்குறை: கரோனா பரவலால் நாட்டின் வருவாய் பெருமளவில் குறைந்ததன் காரணமாக கடன் வாங்கி திட்டங்களைச் செயல்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. அதன் விளைவாக அரசின் நிதிப் பற்றாக்குறை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 2025-26-ஆம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் இல்லை: உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் பெறும் நோக்கில் அந்த மாநிலங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய அறிவிப்புகள் எதையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் வாசித்தாா். அவா் அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குரலெழுப்பினா். முக்கியமாக, ஏலம் மூலமாக 5ஜி அலைக்கற்றை தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சா் தெரிவித்தபோது, ‘பிஎஸ்என்எல் நிறுவனம் என்னானது?’ என சிலா் கேள்வி எழுப்பினா்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கும்  வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்வாக பங்களிப்புத் தொகைக்கான  வரி விலக்கு வரம்பு 10-இலிருந்து 14 சதவீதமாக நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
என்.பி.எஸ்.-இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள நிர்வாக பங்களிப்பு 14 சதவீத தொகை வரிவிலக்கைப் போன்று, மாநில அரசு ஊழியர்களுக்கும் வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகள்
*        எண்ம செலாவணி அறிமுகம்.
*        "சிப்' பொருத்தப்பட்ட இ-பாஸ் போர்ட் அறிமுகம். 
*    மெய்நிகர் சொத்துகளின் பரிவர்த்தனைக்கு 30 சதவீதம் வரி.
*    விவசாயத்திலும் நில அளவையிலும் ட்ரோன் பயன்பாடு.
*    3 ஆண்டுகளில் 400 "வந்தே பாரத்' ரயில்கள்.
*    சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் மறுசீரமைப்பு
*    ஒவ்வொரு வகுப்புக்கும் பிராந்திய மொழியில் தனித்தனி தொலைக்காட்சி சேனல்கள்.
*    5ஜி அலைக்கற்றை ஏலம்

ஒதுக்கீடுகள்
*     பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.44,720 கோடி கூடுதல் மூலதனம்.
*    ரயில்வேக்கு ரூ.1.40 லட்சம் கோடி.
*    கோதுமை, நெல் கொள்முதலுக்கு ரூ.2.37 லட்சம் கோடி. 
*    வீடுதோறும் குடிநீர்க் குழாய் திட்டத்துக்கு ரூ.60,000 கோடி.
*    பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.48,000 கோடி. 
*    சூரிய மின்கலன்கள் தயாரிப்புக்கு கூடுதலாக ரூ.19,500 கோடி.
*    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.1,500 கோடி. 
*        எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன்.
*    உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.1.85 லட்சம் கோடி.

வரிச் சலுகை/ வரி அறிவிப்பு
*    தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.50,000 கூடுதல் வரிவிலக்கு  தொடரும்.
*    கூட்டுறவு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (ஏஎம்டி) 15 சதவீதமாகக் குறைப்பு.
*    வெளிநாட்டு குடைகளுக்கு 20 சதவீத வரி.
*    சில மின்னணு உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.
*    பொலிவூட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரி 5%-ஆக குறைப்பு.

விலை  அதிகரிக்கும் பொருள்கள்
இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்கள், இயர்போன், குடைகள், சூரிய மின்கலன், சூரிய மின் தகடுகள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர், கவரிங் நகைகள், எக்ஸ்ரே இயந்திரம், பேட்டரியில் இயங்கும் சிறார் விளையாட்டுப் பொருள்களுக்கான உதிரிபாகங்கள்.
இறக்குமதி வரி அல்லது இவற்றின் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பால் மேற்கண்ட பொருள்களின் விலை உயருகிறது. 
உள்நாட்டில் சிறு தொழில் புரிவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வெளிநாட்டு குடைகள், அதற்கான உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை குறையும் பொருள்கள்
இறக்குமதி செய்யப்படும் பொலிவூட்டப்பட்ட மற்றும் அறுத்து வடிவமைக்கப்பட்ட வைரங்கள், உணவாகப் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட சிப்பிகள், பதப்படுத்தப்பட்ட கணவாய் மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தனால், அசிட்டிக் அமிலம், செல்லிடப்பேசி கேமராக்களுக்கான லென்ஸ் ஆகியவற்றின் விலை குறையும்.
மேற்கண்ட பொருள்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அவற்றின் விலை குறைய இருக்கிறது. இதில் செல்லிடப்பேசி கேமரா லென்ஸ் மீதான வரி 15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT