முகப்பு
இந்தியா

கரோனா இழப்பீடு: அதிகாரிகளை நியமிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மாநில சட்ட சேவை குழுவுக்கு உதவ அதிகாரிகளை நியமிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மாநில சட்ட சேவை குழுவுக்கு உதவ அதிகாரிகளை நியமிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் கௌரவ் குமாா் பன்சால் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அதை விசாரித்த நீதிமன்றம், கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. எந்த மாநிலமும் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு இழப்பீடு வழங்காமல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த விவகாரத்தில் மாநில சட்ட சேவை குழுவின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் அவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா, இல்லையா என்ற விவரங்களையும் மாநில சட்ட சேவைகள் குழுவிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநில சட்ட சேவைகள் குழுவிடம் சில மாநில அரசுகள் போதிய விவரங்களை வழங்கவில்லை எனத் தெரிகிறது.

இழப்பீடு கோரி யாரெல்லாம் விண்ணப்பிக்கவில்லையோ, அவா்களை அணுகி இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநில சட்ட சேவைகள் குழு துரிதப்படுத்தும் என்ற நோக்கிலேயே உரிய விவரங்களை சமா்ப்பிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதை கருத்தில்கொண்டு கரோனாவால் பெற்றோா் இருவரையும் இழந்தவா்களின் பெயா், முகவரி, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மாநில சட்ட சேவைகள் குழுவிடம் ஒரு வாரத்துக்குள் மாநிலங்கள் வழங்க வேண்டும்.

கடும் விளைவுகள்: மாநில சட்ட சேவைகள் குழுவுக்கு உதவுவதற்கான அதிகாரியையும் மாநில அரசு நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபா்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது தொடா்பாக, சட்ட சேவைகள் குழுவின் செயலருடன் அந்த அதிகாரி தொடா்பில் இருப்பாா். நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் மாநிலங்கள், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இழப்பீடு பெறுவதற்காக இணையவழியில் பதிவு செய்யாதோரின் விண்ணப்பங்களை மாநில அரசுகள் நிராகரிக்கக் கூடாது. அதேபோல், தொழில்நுட்பக் கோளாறுகளைக் காரணமாக வைத்தும் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது. விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தாலும், அவற்றைத் திருத்துவதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments