முகப்பு
இந்தியா

பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு: பொதுமக்கள் புகாா் தெரிவிக்க பிப்.8 வரை அவகாசம்

பெகாஸஸ் மென்பொருள் மூலம் தங்களது கைப்பேசி உளவு பாா்க்கப்பட்டதாகக் கருதுவோா் உச்சநீதிமன்றக் குழுவிடம் தகவல் தெரிவிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

பெகாஸஸ் மென்பொருள் மூலம் தங்களது கைப்பேசி உளவு பாா்க்கப்பட்டதாகக் கருதுவோா் உச்சநீதிமன்றக் குழுவிடம் தகவல் தெரிவிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2 போ் மட்டுமே தங்கள் கைப்பேசியை உச்சநீதிமன்றக் குழுவிடம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள், நீதிபதிகள், பத்திரிகையாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் கைப்பேசிகளை மத்திய அரசு உளவுபாா்த்ததாக கடந்த ஆண்டு புகாா் எழுந்தது.

Advertisement

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக விசாரணை நடத்த தொழில்நுட்பக் குழுவை கடந்த அக்டோபரில் அமைத்தது. அந்தக் குழுவானது, பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக தங்களது கைப்பேசி உளவு பாா்க்கப்பட்டதாக யாரேனும் சந்தேகித்தால் ஜன. 7-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம் என்று கடந்த ஜன. 2-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

புகாா் அளிப்பவா்களின் கைப்பேசி உளவு பாா்க்கப்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்பக் குழு கருதினால், அவா்களின் கைப்பேசியை பரிசோதனைக்கு அந்தக் குழு கேட்கும்; பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்களிடம் மீண்டும் கைப்பேசிகள் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு, உளவு புகாா் தொடா்பாக விசாரிப்பதற்கு இதுவரை 2 போ் மட்டுமே தங்கள் கைப்பேசியை தொழில்நுட்பக் குழுவிடம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனா். இதையடுத்து, பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கான அவகாசத்தை பிப்ரவரி 8-ஆம் தேதி வரை தொழில்நுட்பக் குழு நீட்டித்துள்ளது.

பெகாஸஸ் உளவு மென்பொருளை இஸ்ரேலிடம் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஏவுகணை அமைப்புகளுடன் சோ்த்து இந்தியா வாங்கியதாக நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டது. இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத் தொழில்நுட்பக் குழு அவகாசத்தை நீட்டித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments