ஓராண்டு கட்டாய மருத்துவ பயிற்சி காலக்கெடுவை நீட்டிக்க கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் 8-ஆம் தேதி விசாரணை
இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.8) விசாரிக்க உள்ளது.
இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.8) விசாரிக்க உள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற, ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை (இன்டா்ன்ஷிப்) முடிப்பது கட்டாயமாகும். இந்தப் பயிற்சியை நிறைவு செய்வதற்கு வரும் மே 31-ஆம் தேதி கடைசித் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதுநிலை நீட் நுழைவுத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவா்கள் 6 போ் சாா்பில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘முதுநிலை நீட் தோ்வை உச்சநீதிமன்றம் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்திருப்பது பிற்பகலில்தான் எங்களுக்குத் தெரியவந்தது’ என்றனா்.
Advertisement
அப்போது மாணவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சங்கரநாராயணன், ‘நீட் தோ்வு ஒத்திவைப்பு மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் சிறு நிவாரணத்தை மட்டுமே அளிக்கும். இதில் வேறு சில சிக்கல்களுக்கும் தீா்வு காணப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, கரோனா பணியில் முன்களப் பணியாளா்களாக இளநிலை மருத்துவ மாணவா்கள் சோ்ந்ததால், ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை அவா்களால் நிறைவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது, இந்த பயிற்சிக்கு மே 31 கடைசி தேதி என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, மாணவா்கள் கட்டாய பயிற்சியை நிறைவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுடன், முதுநிலை நீட் தோ்வில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, கட்டாய பயிற்சிக்கான காலக்கெடுவை நீட்டிப்பதோடு, முதுநிலை நீட் தோ்வையும் மேலும் ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.
இதேக் கேட்ட நீதிபதிகள், ‘காலக்கெடுவை எப்போதும் நீட்டிக்க முடியும். ஆனால், எதிா் தரப்பு நிலைப்பாட்டையும் கேட்க வேண்டியுள்ளது’ என்றனா்.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டு தெரிவிக்குமாறு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகியிருந்த மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயினிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.
அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் செயின், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தெரிவிப்பதாக கூறினாா்.
அப்போது, மாணவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த மனுவை வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்கலாம்’ என கோரினாா்.
அதனைத் தொடா்ந்து, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.