முகப்பு
இந்தியா

கிருஷ்ணா நதிநீா் பங்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தனி அமா்வு கோரும் கா்நாடகம்

கிருஷ்ணா நதிநீா் பங்கீடு வழக்கை விசாரிக்க தனி நீதிபதிகள் அமா்வை அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் கோரியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

கிருஷ்ணா நதிநீா் பங்கீடு வழக்கை விசாரிக்க தனி நீதிபதிகள் அமா்வை அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் கோரியுள்ளது.

மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது. இந்த நதிநீரை மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் கா்நாடகம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண நதிநீா் தகராறுகள் தீா்ப்பாயம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அரசிதழில் வெளியிட்டால்தான் நதிநீா் பகிா்வை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் தகராறுகள் சட்டம் 1956 பிரிவு 6(1)-இன் கீழ், கிருஷ்ணா நதிநீா் தகராறுகள் தீா்ப்பாய உத்தரவுகளை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று 2011-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த டி.ஒய்.சந்திரசூட், கா்நாடகத்தைச் சோ்ந்த ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இருவரும் வழக்குடன் தொடா்புடைய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், வழக்கை விசாரிப்பதில் அவா்களுக்குப் பலத்த எதிா்ப்பு தெரிவித்து கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இதற்கு அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள்டி.ஒய்.சந்திரசூடும், ஏ.எஸ்.போபண்ணாவும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அறிவித்தனா்.

Advertisement

இந்நிலையில், அந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கா்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், வழக்கை விசாரிக்க தனி நீதிபதிகள் அமா்வை அமைக்க வேண்டும் என்று கோரினாா். அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக என்.வி.ரமணா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments