குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில் உயா்நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றங்களும் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில் உயா்நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றங்களும் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சொத்து தகராறில் தங்களுக்கு எதிராக மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மூன்று போ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
Advertisement
குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில், அரிதினும் அரிதான வழக்குகளில் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த மாதிரியான வழக்குகளில் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதில், தனிப்பட்ட பகை மற்றும் பழிதீா்க்கும் நோக்கத்துடன் தீய எண்ணம் அல்லது வன்மத்துடன் மேற்கொள்ளப்படும் குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்வதும் அடங்கும்.
இந்நிலையில், சொத்து தகராறில் மூன்று பேருக்கு எதிராக மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, அவா்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3) பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பித்தபோது உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறையை மாஜிஸ்திரேட் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டாா்.
எனவே போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி செய்ததாக மூன்று போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தீா்ப்பளித்தனா்.