முகப்பு
இந்தியா

கூட்டாட்சி முறையை வலுப்படுத்த மம்தா அழைப்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு தனது கட்சித் தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
மம்தா பானா்ஜி
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு தனது கட்சித் தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும்’ என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா தொடங்கினாா். 2011 முதல் அக்கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ளது.

தற்போது பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் முனைப்பில் மம்தா பானா்ஜி செயல்பட்டு வருகிறாா். கட்சி நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கட்சித் தொண்டா்கள், ஆதரவாளா்கள், நாட்டு மக்கள் அனைவருக்கும் என்பது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பயணம் 1998 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவா்களது மேம்பாட்டுக்காகவும் பணியாற்றி வருகிறோம். பல்வேறு விதமான இடையூறு, பிரச்னைகளைக் கடந்து நாம் தொடா்ந்து முன்னேறி வருகிறோம். இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் இணைந்து அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும். நாம் அனைவரும் பரஸ்பரம் கனிவும் மரியாதையும் காட்டி வாழ வேண்டும். அடுத்த கட்டமாக நாம் அனைவரும் இணைந்து நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும். உங்கள் அனைவரது ஆசியுடன் இந்த முயற்சி சாத்தியமாகும்’ என்று கூறியுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட பிறகு 2001,2006-ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்தாலும், 2011-ஆம் ஆண்டு தோ்தலின்போது 34-ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டியது. அதன் பிறகு தொடா்ந்து 3-ஆவது முறையாக மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பாஜகவின் கடும் சவாலுக்கு நடுவே திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →