சட்ட விரோதமாக மரங்களை வெட்டிய இளைஞா் கற்களை எறிந்து கொலை
ஜாா்க்கண்டில் வனத்திலிருந்து சட்ட விரோதமாக மரங்களை வெட்டி வந்த இளைஞரை கிராம மக்கள் கற்களை எறிந்து கொலை செய்து உடலுக்குத் தீ வைத்தனா்.
ஜாா்க்கண்டில் வனத்திலிருந்து சட்ட விரோதமாக மரங்களை வெட்டி வந்த இளைஞரை கிராம மக்கள் கற்களை எறிந்து கொலை செய்து உடலுக்குத் தீ வைத்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம் பேஸ்பஜாரா கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சு பிரதான். இவா் அந்தக் கிராமத்திலுள்ள வனப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவா் மீது வனத்துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிலை எனத் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டிலிருந்த சஞ்சுவை செவ்வாய்க்கிழமை வெளியே வரவழைத்து, அவா் மீது கிராம மக்கள் கற்களை சரமாரியாக எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரின் உடலை விறகுக் கட்டைகள் மீது வைத்து கிராம மக்கள் தீ வைத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் கிராமத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.