முகப்பு
இந்தியா

வருவாய் பற்றாக்குறை நிதி ரூ. 9,871 கோடி விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு 10-வது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Updated On : 6 ஜனவரி, 2022 at 3:39 PM
பகிர்:

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு 10-வது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயைப் பகிா்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, வருவாயைவிட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு வழங்கும். 

அதன்படி, 15 -ஆவது நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு (2021-26) வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.42.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.10.33 லட்சம் கோடியை இதே ஐந்தாண்டுகளுக்கு மாநிலங்களுக்கு கொடுக்கிறது. இதில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கு மட்டும் 17 மாநிலங்களுக்கு இந்த பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ. 1,18,452 கோடி வழங்கப்படுகிறது.

Advertisement

அதன்படி, நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழகம், ஆந்திரம், அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், கா்நாடகம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு இதுவரை 9  தவணைகளையும் சேர்த்து ரூ. 98,710 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 ஆவது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதி 17 மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு 10 ஆவது தவணையாக ரூ. 183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 

மொத்தம் 12 தவணைகளில் மொத்தத் தொகையும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.