தீ விபத்தை கடவுளின் செயலாக குறிப்பிட முடியாது: உச்சநீதிமன்றம்
‘தீ விபத்து ஏற்பட்டதற்கு புயல், வெள்ள பாதிப்பு, மின்னல் தாக்குதல் அல்லது நில நடுக்கம் போன்ற வெளிப்புற இயற்கை தாக்கங்கள் எதுவும் காரணமில்லை என்பதற்காக, அந்த விபத்தை ‘கடவுளின் செயல்’ என்று குறிப்பிட்டு
‘தீ விபத்து ஏற்பட்டதற்கு புயல், வெள்ள பாதிப்பு, மின்னல் தாக்குதல் அல்லது நில நடுக்கம் போன்ற வெளிப்புற இயற்கை தாக்கங்கள் எதுவும் காரணமில்லை என்பதற்காக, அந்த விபத்தை ‘கடவுளின் செயல்’ என்று குறிப்பிட்டு விட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாதில் மதுபான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை ‘கடவுளின் செயல்’ என்று குறிப்பிட்டு, அந்த மதுபான நிறுவனத்துக்கு கலால் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் மெக்டோவெல் என்ற மதுபான நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீ விபத்துக்கு நிறுவனத்தின் கவனக் குறைவே காரணம் என்று கூறி, அந்த நிறுவனத்துக்கு வழக்கம்போல ரூ.6.39 கோடி கலால் வரி விதித்து மாநில கலால் வரித் துறை ஆணையா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து, அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், ‘நிறுவனத்தின் மதுபான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கடவுளின் செயலன்றி வேறொன்றுமில்லை’ என்று குறிப்பிட்டு, கலால் வரி செலுத்துவதிலிருந்து அந்த நிறுவனத்துக்கு விலக்களித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து மாநில கலால் துறை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தற்போதைய வழக்கு தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களின் தாக்கத்தால் ஏற்பட்டதா என்பது குறித்து அல்ல. அதே நேரம், இந்த தீ விபத்துக்கு வெளிப்புற இயற்கை பாதிப்புகள் காரணமல்ல என்பதற்காக, அந்த பாதிப்பு ‘கடவுளின் செயல்’ என்று குறிப்பிட்டுவிட முடியாது.
இந்த தீ விபத்து கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதியன்று பகல் 12.55 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள், அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
எனவே, இந்த தீ விபத்துடன் தொடா்புடைய அனைத்து காரணிகளையும் ஒட்டுமொத்தமாக கவனத்தில் கொள்ளும்போது, இந்த தீ விபத்தும் அதனால் ஏற்பட்ட பேரிழப்பும் மனித கட்டுப்பாட்டை மீறி நடந்திருப்பதாக கூறுவதையும் இதனை தவிா்க்க முடியாத விபத்தாக குறிப்பிடுவதையும் ஏற்றுக்கொள்வது கடினம்.
மேலும், தீ விபத்து தானாக ஏற்பட்டு விடுவதில்லை. தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மின் சாதனங்களில் முறையான தீ தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இந்த தீ விபத்தை தவிா்த்திருக்க முடியும் என்பதோடு, இழப்பும் குறைந்திருக்கும்.
அந்த வகையில், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரியவருகிறது. எனவே, அந்த நிறுவனத்துக்கு கலால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.