முகப்பு
தமிழ்நாடு

கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பற்றி...

Updated On : 18 மார்ச், 2026 at 12:55 AM
கீழடி அகழ்வாராய்ச்சி - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்பட தமிழகத்தின் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழடியில் 11-ஆவது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் கடந்த 2025 ஜூலை மாதம் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த முன்மொழிவுகள் நவம்பா் மாதத்தில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவரின் கூட்டத்திலும் பரிசீலிக்கப்பட்டன. எனினும், ஒப்புதல் வழங்குவதில் சுமாா் 8 மாதங்களாக தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அகழாய்வுப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

முதல்வா் வலியுறுத்தல்: இதையடுத்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே இருப்பதாகவும், பருவமழை காரணமாக அதன் பின்னா் களப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தாா்.

Advertisement

இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த மாா்ச் 13-ஆம் தேதி இதற்கான அதிகாரபூா்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1959-ஆம் ஆண்டின் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதிகளின் கீழ், நிபுணா் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பணிகள் தொடக்கம்: இதன் மூலம் தமிழகத்தின் தொன்மையான நகர நாகரிகத்தை வெளிக்கொணரும் அடுத்தகட்டப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக, தமிழக அரசு தனது 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 இடங்களில் அகழாய்வு: எனவே, மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11-ஆம் கட்ட ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூா், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூா், கடலூா் மாவட்டம் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சநல்லூா், கோவை மாவட்டம் வெள்ளலூா், சேலம் மாவட்டம் தெலுங்கனூா்-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த பண்டைய தமிழா்களின் வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள இந்த விரிவான ஆய்வுகள் பெரிதும் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, திமுக அரசின் தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தொடா் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, திமுக அரசின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, மத்திய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்திவைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

summary

Central Government Grants Permission for Excavations at 8 Sites, Including Keeladi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.