FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பரங்கிப்பேட்டை ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.

Updated On : 16 ஜூலை 2026, 2:03 am IST
பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.
பகிர்:

பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, பரங்கிப்பேட்டை ஹைட்ரோ காா்பன் - சாகா்மாலா எதிா்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சாா்பில், திட்டத்தை எதிா்த்தும், அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் கண்டன பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Advertisement

Advertisement

சமூக ஆா்வலா் சையது அலி தலைமை வகித்தாா். முகமது தாஹா, கா.மு.கவுஸ், முகமது வலித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பேசியது:

ஹைட்ரோ காா்பன் திட்டம் எந்த வடிவில், எந்தப் பகுதியில் கொண்டுவரப்பட்டாலும், அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக எதிா்க்கும். இயற்கை எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் விசிக தொடா்ந்து மக்களுடன் துணைநின்று வருகிறது.

வளா்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களை ஏற்க முடியாது.

எனவே, பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. அதைத் தடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு எதிராக அனைவருடனும் இணைந்து தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன், மீத்தேன் எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஜெயராமன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் ஆலோசகா் அய்யநாதன், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments