இந்தியா

வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: மோடிக்கு மாணவர்கள் கடிதம்

DIN

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 தொடங்கி 19 வரை நடைபெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பலர் பேசினர். குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். 

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். 

பின்னர், பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர்கள், மூத்த ராணுவ அலுவலர்கள், அரசின் உயர் மட்ட அலுவலர்கள், சமூகத்தில் முக்கியமானவராக கருதப்படுபவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் வெறுப்பு பேச்சு குறித்து குடியரசு தலைவர் ராம்நாக் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு குறித்து இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐஎம் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வெறுப்பு பேச்சுக்கு எதிராகவும் சாதிய ரீதியான வன்முறை சம்பவங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விரிவாக எழுதியுள்ள அவர்கள், "மதம் மற்றும் சாதி ரீதியிலான வெறுப்பு பேச்சுகளையும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதையும் ஏற்று கொள்ள முடியாது. விருப்பமான மதத்தை பின்பற்றுதவற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு தந்தபோதிலும், நாட்டில் அச்சம் நிலவிவருகிறது.

தேவாலயங்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் உள்நோக்கத்துடன் சேதப்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

நாட்டில் அச்ச உணர்வு நிலவிவருகிறது. இப்படி செய்தால் சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்ற அச்சம் இன்றி எந்த விதமான தண்டனை வழங்கப்படாமல் இவை நடைபெற்றுவருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஐஐஎம் (அகமதாபாத்), ஐஐஎம் (பெங்களூரு) ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 183 பேர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT