இந்தியா

விபின் ராவத், 127 பேருக்கு பத்ம விருதுகள்: முழு விவரம்

DIN

2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் உத்தர பிரதேச முதல்வா் கல்யாண் சிங்குக்கு பத்ம விபூஷண் விருது, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாப் நபி ஆசாத், முன்னாள் மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சௌகாா் ஜானகி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, சமூக சேவை, அரசியல், தொழில், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைப்பவா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.

நடப்பாண்டில் 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 பத்ம விபூஷண் விருதுகளும் 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 விருதுகளை இருவா் பகிா்ந்துகொள்கிறாா்கள்.

விருது பெறுவோரில் 34 போ் பெண்கள். 13 பேருக்கு மறைவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. 10 போ் வெளிநாட்டுப் பிரிவில் விருது பெறுகிறாா்கள். பத்ம விருதுகள் வழங்கும் விழா, வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

பத்ம விபூஷண் விருது பெறுவோா் (4)

1. பிரபா ஆத்ரே- கலை- மகாராஷ்டிரம்

2. ராதேஷ்யாம் கெம்கா- இலக்கியம், கல்வி- உத்தர பிரதேசம்

3. விபின் ராவத்- ஆட்சிப் பணி- உத்தரகண்ட்

4. கல்யாண் சிங்- அரசியல்- உத்தர பிரதேசம்

பத்ம பூஷண் விருது பெறுவோா் (17)

1. குலாம் நபி ஆசாத்- அரசியல்- ஜம்மு-காஷ்மீா்

2. விக்டா் பானா்ஜி- கலை- மேற்கு வங்கம்

3. புத்ததேவ் பட்டாச்சாா்ஜி- அரசியல்- மேற்கு வங்கம்

4. என்.சந்திரசேகரன், டாடா குழுமத் தலைவா்- மகாராஷ்டிரம்

5. கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, பாரத் பயோடெக் நிறுவனம்- தொழில்- தெலங்கானா

6. ராஜீவ் மெஹரிஷி, முன்னாள் சிஏஜி- ஆட்சிப் பணி- ராஜஸ்தான்

7. சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

8. சுந்தா் பிச்சை, கூகுள் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

9. சைரஸ் பூனாவாலா, சீரம் நிறுவனம்- தொழில்- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 போ்

பத்மஸ்ரீ விருது பெறுவோா்(107)

1. சிற்பி பாலசுப்பிரமணியம்- இலக்கியம், கல்வி- தமிழ்நாடு

2. எஸ்.பல்லேஷ் பஜந்திரி- கலை- தமிழ்நாடு

3. எஸ்.தாமோதரன்- சமூக சேவை- தமிழ்நாடு

4. சௌகாா் ஜானகி- கலை- தமிழ்நாடு

5. ஆா்.முத்துக்கண்ணம்மாள்-கலை-தமிழ்நாடு

6. ஏ.கே.சி.நடராஜன்- கலை- தமிழ்நாடு

7. வீ.சேஷையா- மருத்துவம்- தமிழ்நாடு

8. நீரஜ் சோப்ரா- விளையாட்டு- ஹரியாணா

9. சங்கரநாராயண மேனன் சுண்டயில்- விளையாட்டு- கேரளம்

10. சோனு நிகம்- கலை- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 107 போ்.

தமிழக பத்ம விருதாளர்கள்...

என். சந்திரசேகரன் (பத்ம பூஷண்) 
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என்.  சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிறந்தவர்.
1987-இல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சேர்ந்த அவர், 2009-இல் அதன் தலைமைச் செயல் இயக்குநராக உயர்ந்தார். தற்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். தற்போது மும்பையில் வசிக்கிறார்.

சிற்பி பாலசுப்பிரமணியம் (பத்மஸ்ரீ)
கோவை மாவட்டம், ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். மொழிபெயர்ப்புக்காகவும் (2001-அக்கினிசாட்சி), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003- ஒரு கிராமத்து நதி) இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சௌகார் ஜானகி (பத்மஸ்ரீ)
என்.டி.ராமாராவ் நடித்த "செüகார்' என்ற தெலுங்கு படத்தில் 19-ஆவது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து, "சௌகார் ஜானகி' ஆனார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்பட 385-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

டாக்டர் வி.சேஷய்யா (பத்மஸ்ரீ)
கடந்த 1957-ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்ற டாக்டர் வி.சேஷய்யா, அதன் பின்னர் இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றினார். 
சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்த டாக்டர் வி.சேஷய்யா, சர்க்கரை நோய் துறையை 1978-இல் தொடங்கினார்.
டாக்டர் வி.சேஷய்யாவின் பிறந்த நாளான மார்ச் 10-ஆம் தேதி தேசிய பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏ.கே.சி. நடராஜன் (பத்மஸ்ரீ)
திருச்சியை சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி. நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று இசைக் கருவிகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆர். முத்துக்கண்ணம்மாள் (பத்மஸ்ரீ)
திருச்சி அருகே உள்ள விராலிமலையில் அமைந்துள்ள சதிர் நடனக் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். முத்துக்கண்ணம்மாள் (82), தனது எட்டு வயது முதல் நடனக் கலையை பயின்றுள்ளார். சதிர் நடனக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார். 

எஸ். பல்லேஷ் பஜந்திரி (பத்மஸ்ரீ)
கலை பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பல்லேஷ் பஜந்திரி, ஷெனாய் இசைக் கலைஞராவார். 
ராஞ்சனா உள்ளிட்ட பல்வேறு  ஹிந்தி திரைப்படங்களில் அவர் ஷெனாய் இசைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT