பஞ்சாப் தேர்தல்: 27 பேர் அடங்கிய பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.
117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்புக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் தலைமையிலான சிரோமணி அகாலிதளம் (சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. தொகுதிப் பங்கீடு உடன்பாட்டின்படி பாஜக 65 இடங்களில் போட்டியிடுகிறது.
இதையும் படிக்க | பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? ராகுல் பரபரப்பு கருத்து
இதற்கான 27 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பதேஜன் சிங் பஜ்வா மற்றும் ஹர்ஜோத் கமல் என இரண்டு எம்எல்ஏ-க்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா பக்வரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் பர்காஷ் சிங் போட்டியிடும் லம்பி தொகுதியில் ராகேஷ் திங்க்ராவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. சிரோமணி அகாலி தளத்தில் ஜலந்தர் கன்ட்டில் போட்டியிட இடம் கொடுக்காததால் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சரப்ஜித் சிங் அதே ஜலந்தர் கன்ட்டில் போட்டியிடுகிறார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது.