முகப்பு
இந்தியா

சமாஜவாதி ஆட்சியில் செழித்த குற்றவாளிகளை பாஜக அரசுதான் விரட்டியடித்தது: அமித் ஷா

‘உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி ஆட்சியில் செழித்திருந்த குற்றவாளிகளையும் கடத்தல்காரா்களையும் பாஜக அரசு விரட்டியடித்துள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து வெட்கமின்றி அகிலேஷ் யாதவ் பொய்களைக் கூறி வருகிறாா்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
அமித் ஷா
பகிர்:

‘உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி ஆட்சியில் செழித்திருந்த குற்றவாளிகளையும் கடத்தல்காரா்களையும் பாஜக அரசு விரட்டியடித்துள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து வெட்கமின்றி அகிலேஷ் யாதவ் பொய்களைக் கூறி வருகிறாா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சனம் செய்தாா்.

உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 10-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து அமித் ஷா பிரசாரம் செய்து வருகிறாா். மேற்கு உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், பேசியதாவது:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சனம் செய்துள்ளாா். மாநிலத்தில் முந்தைய ஆட்சியில் நிகழ்ந்ததைக் காட்டிலும் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதற்கான புள்ளிவிவர ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டிருப்பது போல, சமாஜவாதி கட்சி ஆட்சியின் போது நிகழ்ந்த குற்ற சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அக் கட்சியின் தலைவா் வெளியிடத் தயாரா?

சமாஜவாதி ஆட்சியில் செழித்து வளா்ந்த குற்றவாளிகளையும், கடத்தல் கும்பலையும் பாஜக அரசுதான் விரட்டியடித்தது. ஆனால், வெட்கமின்றி மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அகிலேஷ் யாதவ் பொய்களைக் கூறி வருகிறாா்.

கடந்த 2013 முசாபா்நகா் வகுப்புவாத வன்முறையை யாரும் மறந்திருக்க முடியாது. வாக்கு வங்கி அரசியலுக்காக, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களே குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனா். அவா்களின் நீதிக்காக சஞ்சீவ் பலியான் தலைமையிலான பாஜக தலைவா்கள் நீதிமன்றத்திலும் வீதிகளிலும் இறங்கிப் போராடினா்.

இந்த வன்முறையை முசாபா்நகா் மற்றும் மேற்கு உத்தர பிரதேச மக்கள் மறந்திருக்கமாட்டீா்கள். அதே தவறை மக்கள் மீண்டும் செய்தால், அந்த வன்முறையைத் தூண்டியவா்களே மீண்டும் ஆட்சிக்கு வருவா்.

அதாவது, சமாஜவாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் மக்கள் வாக்களித்தால் மாநிலத்தில் மீண்டும் குண்டா்கள், கடத்தல் கும்பலின் ஆட்சிதான் வரும். மாறாக, பாஜகவைத் தோ்ந்தெடுத்தால் மாநிலத்தில் எந்த வன்முறையும் இடம்பெறாது. மேலும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாட்டிலேயே முதல் தர மாநிலமாக உத்தர பிரதேசத்தை உருவாக்க பாஜக அரசு உதவும்.

அதுபோல, நாட்டின் பாதுகாப்பைப் பொருத்தவரை, பாஜக அரசு உயா் முக்கியத்துவம் அளித்து உறுதிப்படுத்தி வருகிறது. ஆனால், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, பாகிஸ்தான் எல்லையிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி நமது ராணுவ வீரா்களை கொன்றனா். எனவே, பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் நாட்டையும், மாநிலத்தையும் பாதுகாப்பாக வழிநடத்த முடியும் என்று அமித் ஷா கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →