‘மேற்கு வங்க ஆளுநரை நீக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினேன்’: திரிணமூல் எம்பி
மேற்கு வங்க ஆளுநரை நீக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினேன் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆளுநரை நீக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினேன் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கூட்டுத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன்பிறகு, அவையில் அமர்ந்திருந்த உறுப்பினர்களுக்கு அருகில் சென்று குடியரசுத் தலைவர் வணக்கம் தெரிவித்தார். அப்போது திரிணமூலின் சுதிப், குடியரசுத் தலைவரிடம் சிறிது நேரம் பேசினார்.
இதுகுறித்து சுதிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்காரை நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினேன். அப்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும் அருகில் இருந்தார் எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.