இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் படங்கள், கலைப்பொருள்கள்..!

DIN


புது தில்லி:  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உட்புறத்தில் நமது நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் படங்களும் கலைப்பொருள்களும் இடம்பெற உள்ளன.

தில்லியில் நாடாளுமன்றதுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் உட்புறத்தில் நமது நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் படங்களும் கலைப்பொருள்களும் இடம்பெற உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆறு பிரிவுகளுக்கு கலைப் பொருள்கள் தேர்வு செய்யப்படும். கட்டடத்தின் வாயில் பகுதியில் ஒரு காவல்காரர் சிலை, அரசமைப்புச் சட்டத்தைப் பிரபதிபலிக்கும் வகையில் ஒரு காட்சியகம், இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான காட்சியகங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

கலைப் பொருள்களைத் தேர்வு செய்து வைப்பதற்காக மத்திய கலாசார அமைச்சகம் மூன்று குழுக்களை அமைத்துள்ளது. இந்தக் குழுக்களில் கல்வியாளர்கள், வரலாற்று நிபுணர்கள், கலைஞர்கள், பல்வேறு நிபுணர்கள், மத்திய கலாசார அமைச்சகம், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பர். இவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் வைக்கப்பட வேண்டிய கலைப் பொருள்கள் குறித்தும் அந்த வளாகத்தை அலங்கரிப்பது குறித்தும் முடிவு செய்வார்கள்.

இக்குழுக்களில் இரு குழுக்கள் மத்திய கலாசாரத்துறை செயலர் கோவிந்த் மோகன், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் உறுப்பினர் செயலர் சச்சிதானந்த் ஜோஷி ஆகியோர் தலைமையில் செயல்படும்.

மக்களவையில் தேசிய மலரான தாமரை

கோவிந்த் மோகன் தலைமையிலான குழுவில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம், தொல்லியல் நிபுணர் கே.கே.முகமது, பிரசார் பாரதி அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

சச்சிதானந்த் ஜோஷி தலைமையிலான குழுவில் வரலாற்று ஆய்வாளர் கௌரி கிருஷ்ணன், வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கே.ஸ்ரீவாஸ்தவா, தேசிய நவீன ஓவியக் காட்சியகத்தின் இயக்குநர் அத்வைத கடநாயக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த இரு குழுக்களில் ஒன்றில் இடம்பெற்றுள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில் "நாட்டின் கலாசாரத்தையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக புதிய நாடாளுமன்றம் விளங்கும். ஒட்டுமொத்த நாட்டின் பல்வேறு மதங்களின் சிறப்பை வெளிப்படுத்துவதாக கலைப்படைப்புகள் இடம்பெறும். அதேவேளையில் கலைப்பொருள்கள் ஏதோ ஒரு அருங்காட்சியகத்திலோ கண்காட்சியிலோ வைக்கப்படுவது போலில்லாமல் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட வேண்டியது என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம். 

மாநிலங்களவையில் தேசிய மலரான தாமரை

இந்தியாவின் பாரம்பரியம், வரலாறு, கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான கலைப்பொருள்களைத் தேர்வு செய்வதே இக்குழுக்களின் பணியாகும் என்றார். இக்குழுக்களில் ஒன்றில் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினர் கூறுகையில் "வேதங்கள், யோகாசனம், உபநிடதங்கள், சூஃபி மார்க்கம், நாட்டுப்புறக் கலை, கபீர்தாசர் வழி உள்பட அனைத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உட்புற அலங்கரிப்பில் இடம்பெறும். கலைப்படைப்புகளும் இடம்பெறும். இவற்றை ஒருங்கிணைந்து தேர்வு செய்து நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெறச் செய்வதை நிபுணர்களும், அதிகாரிகளும் உறுதிப்படுத்துவார்கள் ' என்றார்.

புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கோண வடிவில் அமைய உள்ள இக்கட்டடத்தின் உட்புறத்தில் தாமரை, மயில், ஆலமரம் ஆகியவை மூன்று தேசியச் சின்னங்களாக அமைக்கப்படும்.

மத்திய மண்டபத்தின் தேசிய மரமான ஆலமரம்

மக்களவைக் கட்டடத்தின் கருத்தாக்கமாக தேசியப் பறவை மயில் இருக்கும். மாநிலங்களவையின் கருத்தாக்கமாக தேசிய மலரான தாமரை இருக்கும். மத்திய மண்டபத்தின் கருத்தாக்கமாக தேசிய மரமான ஆலமரம் இருக்கும். நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் தேசிய சின்னம் இடம்பெறும். குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளதைப் போன்ற ஓவியங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் உட்புறத்தில் வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT