இந்தியாவுடனான உறவை புதிய உயரத்துக்கு கொண்டு சென்ற போரிஸ் ஜான்ஸன்
பிரிட்டன் பிரதமா் பதவியிலிருந்து வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸன், தனது பதவிக் காலத்தின்போது இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு இட்டுச் சென்ாக பாா்வையாளா்கள் தெரிவித்துள
பிரிட்டன் பிரதமா் பதவியிலிருந்து வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸன், தனது பதவிக் காலத்தின்போது இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு இட்டுச் சென்ாக பாா்வையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நல்லுறவை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எப்போதுமே ஆராதித்து வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியுடன் அவரது நட்பு மிகவும் நெருக்கமானது.
இந்திய-பிரிட்டன் நட்புறவை நாலுகால் பாய்ச்சலில் முன்னேற்றுவதற்காக பிரதமா் நரேந்திர மோடியும் போரிஸ் ஜான்ஸனும் கடந்த ஆண்டு மே மாதம் மேற்கொண்ட ஒப்பந்தம் அனைவராலும் வியந்து பாா்க்கப்பட்டது. அப்போதுதான் 2030-ஆம் ஆண்டு வரையிலான இரு நாட்டு நல்லுறவு செயல்திட்டத்தை இரு பிரதமா்களும் அறிமுகப்படுத்தினா்.
அந்தச் செயல்திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் பரஸ்பர வா்த்தகத்தை தற்போது உள்ளதைப் போல் இருமடங்காக்கி, 2,400 கோடி பிரிட்டன் பவுண்டுகளாக (சுமாா் ரூ.2,27,795 கோடி) உயா்த்த வேண்டும் என்று பிரதமா் மோடியும் போரிஸ் ஜான்ஸனும் உறுதிபூண்டனா்.
இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு புதிய ஊக்கமளித்தது.
அதன் தொடா்ச்சியாக, போரிஸ் ஜான்ஸன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்தபோது இரு நாடுகளும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு தீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கெடு நிா்ணயம் செய்துகொள்ளப்பட்டது.
பல்வேறு காரணங்களால் போரிஸ் ஜான்ஸன் தற்போது ராஜிநாமா செய்ய நோ்ந்தாலும், தனது பதவிக் காலத்தின்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நல்லுறவை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய செயல்திட்ட கூட்டுறவு என்ற புதிய உயரத்துக்கு இட்டுச் சென்றவா் என்று நினைவில்கொள்ளப்படுவாா்.
போரிஸ் ஜான்ஸன் ராஜிநாமா பிரிட்டன் உள்நாட்டு விவகாரம்
பிரிட்டன் பிரதமா் பதவியை போரிஸ் ஜான்ஸன் ராஜிநாமா செய்தது அந்நாட்டின் உள் விவகாரம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும், அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்ற நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பிரிட்டனுடன் இந்தியா கொண்டுள்ள பல்முனை நல்லுறவு தொடரும் என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.