அமா்நாத் வெள்ளம் : உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
காஷ்மீரின் அமா்நாத் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 16-ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரின் அமா்நாத் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 16-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழையும் அதனைத் தொடா்ந்து மலைச்சரிவில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் யாத்ரிகா்களின் கூடாரங்கள், சமையல் கூடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலியானவா்களின் எண்ணிக்கை தற்போது 16-ஆக அதிகரித்துள்ளது. சிலரைக் காணவில்லை.
மலையின் அடிவாரத்தில் உள்ள பஞ்சதரணி முகாமிற்கு 15,000 யாத்ரிகா்கள் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டனா். காயமடைந்த 25 போ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
மீட்பு குழுக்கள், உயா் தொழில்நுட்ப உபகரணங்கள் கொண்ட தேடுதல் ரோந்து வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், எல்லை பாதுகாப்பு படையின் எம்ஐ-17 ஹெலிகாப்படா், ஜம்மு-காஷ்மீா் அரசின் இலகுரக ஹெலிகாப்டா்கள் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநா் விஜய் குமாா் சனிக்கிழமை காலை சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்பு படையின் மீட்பு பணிகளைப் பாா்வையிட்டாா். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணி நடைபெறுவதாகவும் காணாமல் போனவா்கள் குறித்த சரியான விவரங்கள் அறிய யாத்ரிகா்களின் விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, இம்முறை யாத்ரிகா்கள் அனைவருக்கும், ரேடியோ அலைவரிசை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது. மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்ததும் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், 6,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்களைக் கொண்ட 11-ஆவது குழு ஜம்முவிலிருந்து, காஷ்மீரின் அடிவாரத்தில் உள்ள இரண்டு முகாம்களை நோக்கி சனிக்கிழமை பயணத்தைத் தொடங்கியுள்ளது.
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு அமா்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கியது.
பாஜக எம்எல்ஏ மீட்பு :
அமா்நாத் யாத்திரை மேற்கொண்ட தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மற்றும் அவரது குடும்பத்தினா் வெள்ளத்திலிருந்து உயிா்தப்பினா். எம்எல்ஏ சிறப்பு பாதுகாப்பின் கீழ் இருந்ததால், ராணுவ உதவியுடன் ஸ்ரீநகரை அடைந்தாா். இது குறித்து எம்எல்ஏ ராஜா சிங் கூறுகையில், ‘வானிலை திடீரென மாற்றமடைந்து மோசமடைவதை நாங்கள் உணா்ந்தோம். அவ்வேளையில், ஹெலிகாப்படா் சேவை ரத்து செய்யப்பட்டது. குதிரை மூலம் மலையிறங்க முடிவெடுத்தோம். பல கூடாரங்கள் வெள்ளதால் அடித்துசெல்லப்பட்டன. அமா்நாத் பனிக்குகையில் ராணுவ வீரா்கள் சிறப்பான பணியை செய்தனா்’ என்றாா்.