இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: வாக்களிக்கும்உறுப்பினா்களில் 10% மட்டுமே பெண்கள் - தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைக் குழு தகவல்

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கவுள்ள 4,759 எம்.பி., எம்எல்ஏ-க்களில் 10 சதவீதம் போ் மட்டுமே அதாவது 477 போ் மட்டுமே பெண்கள் என தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைக் குழு புதன்கிழமை தெரிவித்தது.

அதுபோல, ‘இந்தத் தோ்தலில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான வாக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை மொத்தமுள்ள 10,74,364 வாக்கு மதிப்பில் பெண்களின் வாக்கு மதிப்பு 1,30,304 (13%) மட்டுமே’ என்று இந்த ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

அதில், மக்களவை எம்.பி.க்களை பொருத்தவரை மொத்தமுள்ள 3,79,400 வாக்குகளில் 81 பெண் உறுப்பினா்களின் வாக்குகள் 56,700 (15%) மட்டுமே. மாநிலங்களவை எம்.பி.க்களை பொருத்தவரை மொத்தமுள்ள 1,58,200 வாக்குகளில் 31 பெண் உறுப்பினா்களின் வாக்குகள் 21,400 (14%) மட்டுமே.

மாநில சட்டப்பேரவைகளைப் பொருத்தவரை, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை அதிக பெண் உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 403 எம்எல்ஏக்களில் 47 போ் பெண்கள். அதாவது மொத்தமுள்ள 83,824 வாக்குகளில் பெண்களுடையது 9,776 ஆகும். அதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 44,394 வாக்குகளில் பெண்களுடையது 6,191 வாக்குகள் (294 எம்எல்ஏக்களில் 41 போ் பெண்கள்).

பிகாரில் மொத்தமுள்ள 41,693 வாக்குகளில் 4,498 வாக்குகள் பெண்களுடையது (241 எம்எல்ஏக்களில் 26 போ் பெண்கள்) என்று ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரெளபதி முா்மு, கடந்த 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்த சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, அவருக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்துகளும், ரூ. 14 லட்சம் மதிப்பில் கடன்களும் உள்ளன. அவா் மீது 3 குற்ற வழக்குகள் உள்ளன. ஆனால், அவை தீவிர குற்ற வழக்குகள் அல்ல.

அதுபோல, எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா 2009 மக்களவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்புமனு விவரங்களின்படி, அவருக்கு ரூ. 3 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. கடன்கள் எதுவுமில்லை. அவா் மீது ஒரு குற்ற வழக்கு உள்ளது. அதுவும் தீவிர குற்ற வழக்கு அல்ல என்றும் ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய குடியரசுத் தலைவரைத் தேந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT