இந்தியா

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவை: பிரதமர் நரேந்திர மோடி

DIN

வாக்குகளைப் பெறுவதற்காக இலவசப் பொருள்களை வழங்கும் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலவசப் பொருள்களை குறிப்பதற்காக பிரதமர்  வட இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் ரேவடி எனப்படும் ஒரு வகை இனிப்பினை அரசியல் கட்சிகளால் கொடுக்கப்படும் இலவச பொருள்களுக்கு உருவகமாகக் கூறினார். ஆட்சியினைப் பிடிக்கும் நோக்கில் இது போன்று இலவசங்களை வழங்கும் கட்சிகளிடமிருந்து மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இந்த இலவச கலாசாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் பந்தேல்கண்டில் அமைக்கப்பட்டுள்ள விரைவுச்சாலையை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். இந்த பந்தேல்கண்ட் விரைவுச்சாலை சுமார் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையினால் பயண வேகம் மட்டுமின்றி தொழிற்சாலையின் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

பந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ இந்த புதிய விரைவுச்சாலையின் மூலம் உத்தரப் பிரதேசம் முன்பு சந்தித்து வந்த சாலை இணைப்பு பிரச்னைகள் முடிவுக்கு வரும். இந்த புதிய சாலையின் மூலம் பயண நேரம் 3-லிருந்து 4 மணி நேரம் குறையும். உத்தரப் பிரதேசம் இரட்டை என்ஜின் ஆட்சியின் மூலம் பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்து வருகிறது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் மற்றும் முடிவுக்கு பின்னும் நாட்டின் வளர்ச்சியினை அதிகரிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டிற்கு வளர்ச்சிக்கு தீங்கினைத் தரும் விஷயங்கள் நீக்கப்பட வேண்டும். நாட்டினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை விட்டுவிடக் கூடாது. இந்த சகாப்தத்திலேயே நாட்டின் வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஆனால், புதிய இந்தியாவிற்கு ஒரு சவாலும் உள்ளது. அந்த சவால் இந்த தலைமுறைக்கு தீங்கினைத் தரக்கூடியது. உங்களது நிகழ்காலம் உங்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளும் அச்சம் உள்ளது. அதனால், நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

நமது நாட்டில் இன்று வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் பின்பற்றப்படுகிறது. இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் இனிப்புகளை வழங்குவது போல இருக்கும். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இலவச பொருள்கள் வழங்கும் கலாசாரம் மிகவும் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியது. இந்த கலாசாரத்திற்கு எதிராக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இந்த இலவச பொருள்கள் கலாசாரத்திலிருந்து இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று இலவசங்கள் வழங்குபவர்களால் ஒரு போதும் விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அரசியலில் இலவங்கள் வழங்கும் கலாசாரத்தை முழுவதுமாக நீக்க வேண்டும்.

நாங்கள் இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தை விடுத்து நாட்டின் வளர்ச்சிக்காக பாலங்கள், விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் அமைத்து வருகிறோம். மக்களின் நலனையும் நாங்கள் பாதுகாத்து வருகிறோம். மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியினையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.  முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மாநிலம் இரட்டை என்ஜின் ஆட்சியின் கீழ் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT